ராதிகாவை சமாளிக்க முடியாமல் தடுமாறும் கோபி!

ராதிகாவை சமாளிக்க முடியாமல் தடுமாறும் கோபி!

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. குடும்பப் பெண்களின் மனதை மிகவும் கவர்ந்த இந்தத் தொடர் தற்போது மிகவும் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக பாக்கியலட்சுமியை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த கோபி, தற்போது தனது முன்னாள் காதலி ராதிகாவை பல்வேறு பித்தலாட்டங்களுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டு சொன்னதைக் கேட்கும் நாய்க்குட்டி கணக்காக கொடைக்கானலுக்குத் தேனிலவு சென்றிருக்கிறார்.

தற்போது, ‘பாக்கியலட்சுமி – பாண்டியன் ஸ்டோர் மெகா சங்கம’மாகப் போய்க்கொண்டிருக்கும் இந்தத் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. ராதிகாவுடன் தேனிலவுக்குச் சென்ற கோபிக்கு அங்கும் பல குடைச்சல்களை சந்திக்கிறார். எதிர்பாராதவிதமாக தனது மகன் எழிலை அங்கு சந்திக்கிறார் கோபி. அதோடு, பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனும் ராதிகாவோடு சேர்த்து வைத்து கோபியை பார்த்துவிடுகிறான். தனது அண்ணன் மூர்த்தியை அழைத்து வந்து கோபியிடம் பிரச்னை செய்கிறான். இப்படி எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டு கோபி ராதிகாவிடம் முழிப்பதைப் பார்ப்பதற்கு தமாஷாக உள்ளது. பேரப் பிள்ளைகள் எடுக்கும் வயதில் புது மாப்பிள்ளை போல வேஷம் கட்டிக்கொண்டு ராதிகாவோடு அலையும் கோபிநாத்தை கண்டு அந்த நாடகத்தில் நடிப்பவர்கள் மட்டுமில்லை, நாடகத்தைப் பார்க்கும் அனைவரும் கடுப்பாவது நிச்சயம். அதோடு, காரப் பீஸாக அந்தத் தொடரில் வந்து கொண்டிருந்த கோபி, தற்போது காமெடி பீஸாக வந்து அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.

மேலும் இனி, அடுத்தக்கட்டமாக ராதிகாவோடு அவரது கல்யாண வாழ்க்கை எப்படிப் போகும் என்பது அந்த நாடகத்தைப் பார்ப்பவர் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வந்து நிற்கும் பாக்கியாவை போல், ராதிகாவிடம் அவரது பாச்சா பலிக்கப் போவது இல்லை. ஒருபுறம் சொந்த மகளான இனியா தன்னை புறக்கணிக்கும் அவலம், அம்மா அப்பா தன்னை ஒதுக்கும் கொடுமை இவற்றோடு, தொழிலும் சரியாகப் போகாததால் வருமானமின்றி தவிக்கப்போகும் கோபியை ராதிகா இனி எப்படி நடத்தப்போகிறார் என்பது அனைவரின் ஒட்டுமொத்தக் கேள்வியாக உள்ளது.

ஒருபுறம் பாக்கியலட்சுமி தனது சமையல் தொழிலில் மேலே மேலே போய்க்கொண்டிருக்க, கோபி தனது முன்னாள் காதலி ராதிகாவை கல்யாணம் பண்ண ஆசைப்பட்டு, கௌரவத்தை இழந்து அவமானத்தாலும் அசிங்கத்தாலும் வேதனைப்பட்டு மனம் திருந்தி மீண்டும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு தனது குடும்பத்துடன் சேருவதாகத்தான் அந்தத் தொடர் ஒரு முடிவுக்கு வரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே பொது இடங்களில் சுதந்திரமாக சுற்ற முடியாமல், பொதுமக்களின் பல கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழி பிதுங்கித் தவிக்கும் கோபிநாத்தாக நடிக்கும் சதீஷ்குமார் இனி என்ன செய்யப்போகிறார் என்பதை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com