விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத சிறகடிக்க ஆசை சீரியல்..!

Siragadikka Aasai
Siragadikka Aasai
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியல், குடும்ப உறவுகளின் யதார்த்தமான பின்னணியை மையமாகக் கொண்டு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.

சிறிது விறுவிறுப்பு குறைந்தாலும் மக்கள் பார்ப்பதை குறைத்து விடுவார்கள் என்ற டெக்னிக்கை நன்கு புரிந்து கொண்ட டைரக்டர், கதைக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் கதையை நகர்த்திக் கொண்டு செல்கிறார். தற்கால குடும்பக் கதைகளில் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற முக்கியத் தொடர்பான சிறகடிக்க ஆசை சீரியல், நடுத்தரக் குடும்பப் பின்னணி, யதார்த்தமான கதாபாத்திரங்கள் மற்றும் சுவாரசியமான திருப்பங்கள் ஆகியவற்றால் எப்பொழுதும் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் உள்ளது.

கதைக்களம் சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்தை மையமாகக் கொண்டது. பொறுப்பான தந்தை அண்ணாமலை, முரட்டுத்தனமான ஆனால் பாசக்கார மகன் முத்து, பேராசை பிடித்த தாய் விஜயா மற்றும் குணச்சித்திர நாயகி மீனா ஆகியோருக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளே கதையை சுவாரஸ்யமாக நகர்த்துகிறது. ஏலத்திற்கு வந்த தங்களின் குடும்ப வீட்டை முத்து தனது தீவிர முயற்சியால் மீட்டு, குடும்பத்தினர் மீண்டும் வீட்டிற்குள் மாஸாக ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது போன்ற விறுவிறுப்பான மற்றும் எமோஷனலான திருப்பங்களுடன் கதை சுவாரஸ்யமாக நகர்கிறது.

சிந்தாமணி வீட்டை ஏலம் எடுத்து விடலாம் என போட்ட மாஸ்டர் பிளான் கடைசி நேரத்தில் முத்துவின் அதிரடியால் முறியடிக்கப்பட்டது. அண்ணாமலையோ நெகிழ்ச்சியில் முத்துவிற்கு நன்றி சொல்ல, விஜயா வீட்டிற்கு வந்த ஆனந்தத்தில் கண்ணீர் விடுகிறார். முத்து தான் இத்தனைக்கும் காரணம் என்று விஜயாவிடம் சொல்ல விஜயாவிற்கு முத்து மீது கரிசனம் வருகிறது. இனி விஜயா, முத்து இருவரும் ஒன்று சேருவார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

கதாநாயகன் முத்துவின் (வெற்றி வசந்த்) நேர்மை, கோபம் மற்றும் கதாநாயகி மீனாவின் (கோமதி பிரியா) யதார்த்தமான நடிப்பு ஆகியவை இந்தத் தொடரின் மிகப் பெரிய பலமாக உள்ளது.

இரு வேறு குணங்கள் கொண்ட முத்து-மீனா தம்பதிகளின் காதல் மட்டும் சண்டை காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. இவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியும் சீரியலின் மிகப்பெரிய பலமாகும். முத்து பேசும் வடசென்னை தமிழ் மற்றும் கவுண்டர் வசனங்கள் மக்களைப் பெரிதும் கவர்கின்றன. குடும்பத்தின் தூணாக விளங்கும் அண்ணாமலையின் முதிர்ச்சியான நடிப்பு பாராட்டத்தக்கது. மாமியார் விஜயாவின் சுயநலப் போக்குகளும், அதற்கு குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் கொடுக்கும் எதிர்வினைகளும் மிகவும் இயல்பாக காட்டப்படுகின்றன. கடனில் தத்தளிக்கும் வீட்டை மீட்க முத்து போராடுவதும் மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களின் சூழ்ச்சிகளும் கதையை மிகவும் சுவாரசியமாக நகர்த்தின.

இத்தொடரில் சில மைனஸ் பாயிண்டுகளும் இருக்கத்தான் செய்கின்றன. சமீபத்திய ஏலக் காட்சிகளில் கடைசி நிமிடத்தில் வந்து பணத்தைக் கட்டுவது போன்ற சினிமாத்தனமான லாஜிக் இல்லாத காட்சிகள் இடம்பெற்றன. அதேபோல் விஜயாவின் தொடர் பேராசையும், மீனாவை அவர் நடத்தும் விதமும் சில நேரங்களில் ரசிகர்களுக்கு எரிச்சலைத் தருகிறது. ரோகிணியின் உண்மையான முகம் எப்போது வெளிவரும் போன்ற சில முக்கிய மர்மங்களை நீண்ட நாட்களாக ஜவ்வு போல இழுத்துக் கொண்டே சென்றது சில சமயம் ரசிகர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியது.

சிறகடிக்க ஆசை சீரியல் மற்ற வழக்கமான மாமியார்-மருமகள் சண்டை கதையாக இல்லாமல், நடுத்தரக் குடும்பத்தின் யதார்த்தமான உணர்வுகளையும், சவால்களையும் பிரதிபலிப்பதால் மக்களிடையே நன்கு ரசிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு தொடராக உள்ளது. குடும்ப தலைவிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இத்தொடர் மிகவும் பேசப்படும் ஒன்றாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com