

பொங்கல் வெளியீடுகளாக நடிகர் விஜயின் ஜனநாயகன் படமும் நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தியும் வெளிவரும் என்ற பரபரப்பான விளம்பர முன்னோட்டங்கள் ரசிகர்களுக்கு விருந்தான நிலையில் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக ஜனநாயகன் வெளியாவதில் தடை எழுந்து பராசக்தி மட்டுமே ரிலீஸ் ஆனது.மொழிப் போர் அடிப்படையில் எடுக்கப்பட்ட அரசியல் கலந்த இந்த படமானது பல்வேறு விமர்சனங்களை சந்தித்த நிலையில் எதிர்பார்த்த அளவு வசூல் இல்லை என்று தகவல்கள் வந்துள்ளது.
இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியான பராசக்தி திரைப்படம் ஓடிடிக்கு உடனடியாக வரும் வாய்ப்பு இல்லை என்றும் 8 வாரங்கள் கழித்து தான் வரும் என்றும் கருத்துக்கள் உலவின.
ஏற்கனவே வந்த நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் ரசிகர்கள் இடையே எடுபடாமல் இரண்டு வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாகி அங்கேயும் தடுமாறிவருகிற நிலையில் தெலுங்கு படங்களான பிரபாஸின் தி ராஜாசாப், சிரஞ்சீவியின் மன சங்கர வரபிரசாத் காரு உடன் தமிழ் படங்களான ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' உள்ளிட்ட படங்களும் விரைவில் ஓடிடிக்கு வர வரிசையில் காத்திருக்கின்றன.
பராசக்தி படத்தை எப்படியாவது திரையரங்குகளில் ரசிகர்களை பார்க்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் 8 வாரங்கள் ஓடிடியில் வெளியாகாது என 2வது நாளே வைத்த வெற்றி விழாவில் அறிவித்தது படக்குழு. அப்படியும் தியேட்டரில் காத்து வாங்கிய நிலைதான்.
காரணம் "சுதா கொங்கராவின் முந்தைய படங்களில் இருந்த தாக்கம் இதில் முழுமையாக இல்லை" என்று சில விமர்சகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். தயாரிப்பு தரப்பிலும் இப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் டிராக்கர்களின் தரவுகள் படி பராசக்தி ஒட்டுமொத்தமாகவே வெறும் 85 கோடி தான் வசூலித்துள்ளதாக குறிப்புகள் கூறுகிறது. பொங்கல் விடுமுறைகள் முடிவடைந்ததாலும் புதிய படங்கள் வெளியீடுகளாலும் பராசக்தியின் வசூல் வேகம் குறையத் துவங்கி ஆரம்பத்தில் கோடிகளில் வந்த வசூல், தற்போது லட்சங்களாக சரிந்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
ஆனால், தற்போது பிப்ரவரி 7ம் தேதி ஜீ5 தமிழ் ஓடிடி தளத்தில் பராசக்தி திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது ஆச்சரியம் தருகிறது.
சமீபத்தில், ஜீ5 தமிழில் வெளியான விக்ரம் பிரபு நடித்த 'சிறை' மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், பராசக்தி ஓடிடி ரிலீஸுக்குப் பிறகாவது ரசிகர்களை கவருமா? என்கிற கருத்து உருவாகியுள்ளது.