கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞரான TTF வாசன், விதவிதமான பைக்குகளில் பயணம் செய்து அந்த சாகச விடியோக்களை தனது Twin Throttlers என்று யூ டியூப் பக்கத்தில் வெளியிடுகிறார். அந்த வகையில் TTF வாசனின் இந்த யூடியூப் சேனலுக்கு சுமார் 30 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், TTF வாசன் இளைஞர்களுக்கு தவறான வழகாட்டுதாலாக இருப்பதாகவும், இதேநிலை தொடர்ந்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் கோவை கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று முன் தினம் (ஜூலை 9) தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு என்ன காரணம்?!, TTF வாசன் வெவ்வேறு ஊர்களில் அசத்தலாக வெவ்வேறு பைக்குகளில் பயணம் செய்து வீடியோவாக போடுவதைப் பார்ப்பதற்காகவே காத்துக் கிடக்கிறது இளைஞர் கூட்டம். சமீபத்தில் லடாக் சென்றதை இவர் வீடியோவாக போட்டு 'லைக்ஸ்' களை அள்ளினார்.
பைக்கில் வேகமாக செல்வது, ஸ்டண்ட் செய்வது, ரேஸ் செய்வது ஆகியவை TTF வாசனின் ஸ்டைல். அதை அப்படியே வீடியோவாக படம்பிடித்து போட்டு வருகிறார். அதே சமயம் இவர் அளவுக்கு மீறி பைக்கில் வேகமாக செல்வது, சாலை விதிகளை மீறுவது போன்ற குற்றச்சாட்டுகளும் உண்டு.
சமீபத்தில் , TTF வாசன் தான் சென்னைக்கு வரப் போகும் விஷயத்தை முன்கூட்டியே வீடியோ போட்டு இருந்தார். இதையடுத்து அவரை பார்க்க அப்பகுதிக்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வந்து குவிந்தனர்.
அதேபோல் தனது பிறந்தநாளை முன்னிட்டு TTF வாசன் நேற்று (ஜூலை 9) கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தன் ரசிகர்ளை சந்திக்க அழைப்பு விடுத்து இருந்தார். இதையடுத்து அப்பகுதியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பார்க்க வந்து குவிந்ததில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதையடுத்து , TTF வாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலர் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் இதுகுறித்து கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது:
டிடிஎப் வாசன் போன்றவர்கள் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கிறார்கள். இவர் சாலை விதிமுறைகளை மீறும்பட்சத்தில், ஆட்டோமேடிக்காக காவல்துறை கண்காணிப்பில் வந்துவிடுவார்கள்.
அப்படி வேகமாக செல்லும் பட்சத்தில் அவரது பைக்கை பறிமுதல் செய்வோம் இரவு நேரத்தில் வேகமாக போகும் வாகனங்களையும் அவற்றை இயக்கும் நபர்களையும் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறோம்
-இவ்வாறு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.