2016-க்கு இப்போது விருதா? சின்னத்திரை கலைஞர்களின் நியாயமான குமுறல்..!

Chinnathirai
Chinnathirai
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

நடிப்போ, நடனமோ, பேச்சோ, விளையாட்டோ, போரோ எதுவாக இருந்தாலும், அவற்றில் சிறப்பாகச் செயல்படுபவர்களைப் பாராட்டிப் போற்றுவதில் பாரபட்சமோ, தாமதமோ இருக்கக் கூடாது. பாராட்டு என்பது ஒருவருக்கு உடனடி ஊக்கமளிக்கும் (Instantaneous act) செயலாக இருக்க வேண்டும். அப்படிச் செய்யும் போதுதான் அது அவர்களுக்கு ஒரு 'பூஸ்ட்' (Boost) போல அமைந்து, மேலும் சிறப்பாகச் செயல்படும் உற்சாகத்தை அளிக்கும்.

சின்னத்திரை விருதுகளும் காலதாமதமும்

சமீபத்தில் தமிழக அரசின் சின்னத்திரை நடிகர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. உண்மையில் இது கடந்த 2025-ஆம் ஆண்டிற்கான விருதுப் பட்டியலாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அறிவிக்கப்பட்டதோ 2016 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான பட்டியல்! 2023 முதல் 2025-ஆம் ஆண்டுக்கான பட்டியல் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை.

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தினர் அரசுக்கு ஒரு நியாயமான வேண்டுகோளை வைத்துள்ளனர். "ஒவ்வொரு ஆண்டும் முடிந்த உடனேயே இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டால், அது உரியவர்களுக்கு ஊக்கமளித்து மேலும் பரிணமிக்க வழிவகுக்கும்" என்பதே அவர்களின் கோரிக்கை.

மறைந்த பின் வரும் அங்கீகாரம்

மறைந்த நடிகர்கள் ராஜேஷ், மாரிமுத்து போன்றவர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் உயிருடன் இருந்தபோதே இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தால், அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்! அவர்கள் குடும்பத்தார் தற்போது இதற்காகப் பெருமைப்படலாம்; ஆனால், "இதை அவர்கள் இறப்புக்கு முன் அறிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்ற ஏக்கம் அவர்கள் மனதில் இருப்பதை மறுக்க முடியாது.

தேர்தல் கால அறிவிப்புகள்

தேர்தல் காலம் நெருங்கிவிட்டாலே ‘தேர்தல் ஸ்டண்ட்’ (Election Stunt) என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேட்கிறோம். தன் வாக்கு வங்கியை உறுதிப்படுத்திக்கொள்ள, தேர்தலுக்கு முன்னதாக அவசரம் அவசரமாக கட்சிகள் வெளியிடும் அறிவிப்புகளையே இவ்வாறு குறிப்பிடுகிறோம். இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. சில அவசர அறிவிப்புகளைக் காணும்போது இது உண்மையாக இருக்குமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

வீரர்களுக்கும் கலைஞர்களுக்குமான வேறுபாடு

நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்குத் தியாகத்திற்குப் பின் வழங்கப்படும் விருதுகளை (Posthumous Awards) நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், திரை மற்றும் மேடை நடிகர்கள் அவ்வாறில்லை. நம்மிடையே வாழ்ந்த உன்னதமான மனிதர்களைத் தங்கள் நடிப்பால் நம் கண்முன்னே கொண்டு வருபவர்கள் அவர்கள். அந்தப் பாராட்டுகள் அவர்களை நேரில் சென்றடைய வேண்டும்.

இனிமேலாவது ஆளும் அரசுகள் உரிய நேரத்தில் விருதுப் பட்டியலை வெளியிடுவதையும், வெளியிட்ட சில நாட்களிலேயே அவற்றை வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும்.

பெற்றோர்களுக்கான வேண்டுகோள்

கடைசியாக ஒரு முக்கியக் குறிப்பு: பெற்றோர்களே! உங்கள் பிஞ்சுக் குழந்தைகள் செய்யும் சிறிய செயலைக்கூடப் பெரிதாகப் பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்துங்கள். பரிசுகளை வழங்கி அவர்களைக் கௌரவியுங்கள். அவர்கள் எதிர்காலத்தில் மிகப் பெரும் சாதனைகளைச் செய்ய இந்தச் சிறிய பாராட்டுக்களே அஸ்திவாரமாக அமையும்.

இதையும் படியுங்கள்:
திமுக-வுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ்! 36 தொகுதிகள் + ஆட்சி அதிகாரத்தில் பங்கு..!
Chinnathirai
logo
Kalki Online
kalkionline.com