சின்னத்திரை
‘சிறியதே சிறப்பழகானது’ (Small is Beautiful) என்பார்கள்!
‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது!’ என்பது நம்மூரின் முதுமொழி!
இன்றைய காலக் கட்டத்தில் சின்னத்திரையின் பங்கு மிகப்பெரியது; இன்றியமையாதது; விலக்க முடியாதது; வாழ்வோடு இணைந்து விட்ட ஒன்று!
தொலைக்காட்சி
மடிக் கணினி
க்ரோம் புக்
ஐ பேட்
செல் போன்
என்று சின்னத்திரை இன்று நம்மோடு சிறுகச் சிறுக இணைந்து விட்டது!
வயதானவர்களுக்குப் பொழுது போக்கும் சாதனம்;
வாலிபர்களை வம்பிலிருந்து மீட்பதும் வம்பில் சிக்க வைப்பதும் இதுதான்;
(வரும்; ஆனா வராது! போல)
கொரோனா காலத்தில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அன்புப் பாலம் இது;
இந்தச் சின்னத்திரைதான் வெளிநாட்டில் வளரும் பேரன், பேத்திகளையும் அவர்களின் பெற்றோர்களையும் எம் போன்றோர் கண்டு களிக்க வழியேற்படுத்தித் தந்துள்ள அருஞ்சாதனம்;
நம் வரவேற்பறை, படுக்கை அறை, சமையலறை என்று ஒவ்வொன்றிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த இது, இப்பொழுதோ நம்மோடு இணைந்தே பயணிக்கும் இடத்திற்கு வந்து விட்டது!
உலகமே நம் சட்டைப் பையில்! என்று மார் தட்டிக் கொள்ளும் மகத்துவ நிலையை நமக்குத் தந்திருக்கிறது!
விளையாட்டுப் போட்டிகளாகட்டும், நாமே விளையாட ‘கேம்’களாகட்டும்! எல்லாம் உண்டு சின்னத்திரையில்!
ஏற முடியாத உயரங்கள், நெருங்க முடியாத ஆழங்கள் இவற்றையெல்லாம் நம் கண்களுக்கு விருந்தாக்கும் அற்புத சாதனம் இது!
சரி! அதோடு மட்டுமல்ல! ஒவ்வொரு சானலும் மக்களைக் கவர போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளி/ஒலி பரப்புச் செய்கின்றன. எல்லாமே ‘மெகா.......’ சீரியல்கள்!
பெரும்பாலானவை பல ஆயிரம் எபிசோட்களைக் கொண்டவை! அதாவது பல வருடங்கள் தொடர்ந்து வருபவை!
பல பழங்கலைஞர்களைப் ‘பிசி’யாக வைத்திருப்பதோடு, புதியவர்களின் புகலிடமாகவும் விளங்குகிறது இந்த சின்னத் திரை!
பெண்டிரைப் பெருமைப் படுத்தும் விதமாகப் பல நாடகங்கள் வருவது வரவேற்கத்தக்கது!
பொறுமையாக, நிதானமாக, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் செயலாற்றும் நாயகிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவதாகக் காட்டுவது பாராட்டுக்குரியது! அவை இளம் பெண்களுக்கு வழிகாட்டுவதாக அமைகின்றன.
ஆனாலும் தெரிந்தோ தெரியாமலோ, அந்தப் பெண்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்துவதும் பெண்களாகவே இருப்பதுதான் சற்றே உதைக்கிறது!
‘ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே!’ என்ற முதுமொழியை மெய்ப்பிக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
சின்னத்திரை, சமீப காலத்தில் தன் நாடகத்தனத்திலிருந்து மாறி, சினிமாத் தனத்திற்குள் குதித்திருக்கிறது! வெள்ளித் திரைக் காட்சிகளுக்குச் சற்றும் குறையா வண்ணம் பிரமாண்டம் பெற்று இலங்குகிறது சின்னத்திரை!
பல வெள்ளித் திரை நடிகைகள், அங்கு சம்பாதிக்காத பேரையும், புகழையும் இங்கு அதிகமாகவே சம்பாதித்துள்ளார்கள்! ஏனெனில்,இதன் மூலம் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நம் வீட்டு வரவேற்பறைக்கே வந்து, நம்முடன் சகஜமாகி விடுவதால், அவர்களின் புகழ் ஓங்கி விடுகிறது!
சீரியல் இயக்குனர்கள் கதைகளிலும், காட்சிகளிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்! வெள்ளித் திரைக் கதைகள் பல, ஏகப்பட்ட சிரமங்களுக்குப் பிறகு திருமணங்களில் இனிதே முடியும்!
ஆனால் சின்னத்திரைக் கதைகள் பல, திருமணம் ஆனவர்களைப் பிரித்து வைப்பதையே கதைக் களமாகக் கொண்டு செயல்படுவதை, மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இன்றைய வெள்ளித்திரை, பழி வாங்கும் கதைகளையே அதிகம் காட்டி வருகிறது அதிலும் ஒன்றாகப் பிறந்து வளர்ந்த அண்ணனைத் தம்பிகள் வெட்டுவதும், தங்கை மூத்த அண்ணனுக்குப் பரிந்து இன்னொரு அண்ணனைக் கத்தியால் குத்துவதுமாகப் படம் முழுவதும் மூர்க்கத் தனமான மனிதர்களையே காட்டுவது, எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை. சின்னத்திரை இயக்குனர்களே! உங்களுக்கு அந்த வழி, தயவு செய்து வேண்டாம்.
சில வருடங்களுக்கு முன் ஒரு நடிகையின் மெகா சீரியல் வெளியிடப்பட்டபோது, அந்த சீரியல் ஓடும் மாலை நேரத்தில் ட்ராபிக்கே குறைந்து போனதாகச் செய்திகள் தெரிவித்தன!
அந்த அளவுக்கு சீரியல்கள், மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், சின்னத்திரையினர் சமுதாய நோக்குடன் செயல்படுவது அவசியமாகிறது.
ராமாயணமும், மகாபாரதமும் மீண்டும், மீண்டும் எடுக்கப்படுகின்றன. வெள்ளித் திரையிலும் பல வடிவங்களில் வெளியாகின்றன.
கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் திரைப்படமாக வந்திருந்தாலும், அதைக் கூட மீண்டும் தொடர் சீரியல் ஆக்கலாம்.
சாண்டில்யன் அவர்களின் பல நெடுங்கதைகள் உள்ளன.
அகிலன், நா.பா., போன்றோரின் எத்தனையோ சமூகக் கதைகள் உள்ளன.
இந்த வரிசையில் இன்னும் ஏராள எழுத்தாளர்கள் வருவார்கள்!
சின்னத்திரை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இதனைச் சிந்திக்க வேண்டும்.
உங்களால் ஓர் ஒழுக்கமுள்ள உயர் சமுதாயத்தை உருவாக்க முடியும்! மனது வையுங்களேன்!