விமர்சனம்: THE RIP (2026) - க்ரைம் ஆக்சன் திரில்லர்..!
ரேட்டிங்(2.5 / 5)
THE RIP - 16/1/2026 அன்று நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டது. உண்மை சம்பவத்தை ஒட்டி திரைக்கதை அமைக்கப்பட்ட இந்தப் படம் 100 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன், நாயகி, நாயகியின் காதலன், நாயகனின் தம்பி, வில்லன் இவர்கள் அனைவரும் அரசுப்பணியில் போதைப் பொருள் தடுப்புப்பிரிவில் பணி பிரிகிறார்கள். நாயகி தான் அந்த டீமின் கேப்டன்.
ஒரு வீட்டில் 2 கோடி டாலர் மதிப்பிலான கறுப்புப்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாயகிக்கு தகவல் கிடைக்கிறது. நாயகி தனியாக அந்த இடத்துக்குப்போக முயல்கையில் அந்தப் பணத்தைக் களவாட திட்டம் போட்ட வில்லன் இன்னொரு ஆளின் உதவியோடு நாயகியைக் கொலை செய்து விடுகிறான்.
விசாரணை நடக்கிறது. நாயகன், நாயகியின் காதலன் இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கின்றனர். உடன் பணிபுரியும் நபர் தான் வில்லன் என்பதும் அந்த வில்லன் யார் என்பதும் இருவருக்கும் தெரியாது.
இறக்கும் முன் நாயகி நாயகனுக்கு பணம் இருக்கும் இடம் பற்றி செல்போனில் தகவல் அனுப்பு இருந்தாள். அதன் அடிப்படையில் நாயகன் தலைமையில் ஒரு டீம் களம் இறங்குகிறது. அந்த டீமில் வில்லனும் இருப்பது யாருக்கும் தெரியாது.
அந்த குறிப்பிட்ட வீட்டை முற்றுகை இட்ட அந்த டீம் அங்கே ஒரு பெண் மட்டும் தனிமையில் இருப்பதைப் பார்க்கிறார்கள். அவளிடம் விசாரித்தால் அவளுக்கு விபரம் எதுவும் தெரியவில்லை. 'இது என் பாட்டி வீடு. அவர் இறந்து விட்டார், நான் தான் இப்போது தனியாக இருக்கிறேன்' என்கிறாள்.
வீட்டை சோதனை இட்ட போது பண்டல் பண்டல் ஆக கறுப்புப்பணம் பிடிபடுகிறது.
இப்போது நாயகன் யார் வில்லன் என்பதைக்கண்டு பிடிக்க ஒரு ட்ரிக் செய்கிறான். அந்த ட்ரிக் என்ன? அதில் நாயகன் வெற்றி பெற்றானா? என்பது மிச்சம் மீதித் திரைக்கதை.
நாயகி ஆக கெஸ்ட் ரோலில் வருகிறார் லினா எஸ்கோ. இவர் இயக்குநர் கம் தயாரிப்பாளரும் கூட (இந்தப்படத்துக்கு அல்ல).
நாயகன், வில்லன், நாயகியின் காதலன் மூவர் நடிப்பும் கச்சிதம். நாயகனுக்கும், நாயகியின் காதலனுக்கும் நடக்கும் ஆக்சன் சீக்வன்ஸ் அருமை. மற்ற அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கறுப்புப்பணம் இருக்கும் வீட்டில் வசிக்கும் பெண்ணாக வருபவர் இந்தியப் பெண்ணின் சாயலில் இருப்பது வியப்பு.
மைக்கேல் மெக்ரேல் + ஜோ காமன் இருவரும் இணைந்து கதை எழுத ஜோ காமன் தனித்து திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார்.
ஒளிப்பதிவு ஜான் மைக்கேல். பெரும்பாலான படக்காட்சிகள் இரவு நேரத்தில் வருவதால் கேமராமேனுக்கு சவாலான வேலைதான்.
க்ளிண்ட்டன் சார்ட்டர் தான் இசை. பின்னணி இசையில் தேவையான விறுவிறுப்பைக் கொடுத்து இருக்கிறார்.
கெவின் ஹலெ வின் எடிட்டிங்கில் படம் 113 நிமிடங்கள் ஓடுகிறது.
சபாஷ் டைரக்டர்
ஒரே வீட்டில் ஒரே இரவில் நடக்கும் கைதி பட டைப் கதை என்பதால் சுவராஸ்யம் கூடுகிறது. அனேகமாக லோகேஷ் கனகராஜ் இதை 'பட்டி டிங்கரிங்' செய்ய வாய்ப்புண்டு.
வில்லன் யார் என்பதை அறிய நாயகன் பிடிபட்ட பணத்தின் மதிப்பை ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வேறான தொகையைக்கூற வில்லன் மாட்டும் சீன், 'குட் ஐடியா!'
கிட்டத்தட்ட 2 மணி நேரப்படம் என்றாலும் எங்கும் போரடிக்கவில்லை
ரசித்த வசனங்கள்
அதிகாரிகளே திருடர்களாக இருப்பதுதான் பெரும்பாலும் நடக்குது.
குட்டையைக் குழப்பி தூண்டிலைப் போட்டால் மீன் சிக்கும்
இன்னும் ஒரு சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காக வாழ் ( இதே டைப் டயலாக்கை அமரர் சுஜாதா தில்சே (உயிரே) படத்தில் எழுதி இருப்பார். நீ பார்க்கும் கடைசி சூர்யோதயம் இது தான்.
எல்லாப் போலீசாரோட மூளையும் ஒண்ணுதான். நாங்க ஏதோ தப்புப் பண்ணிட்டோம்னு எங்களையே நம்ப வைக்கற மாதிரி பண்றீங்க
ஒரு போலீசைக் கொல்ல பெரிய விலை கொடுக்கனும்
பொய் சொல்வது ஒரு கலை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
ஓப்பனிங் ஷாட்டில் நாயகியை இருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தும்போது நாயகி தப்ப வழி பார்க்காமல் செல் போனில் உயர் அதிகாரிக்கு மெசேஜ் அனுப்புகிறாரே?பாதுகாப்பான இடத்தில் ஒளிந்த பின் மெசேஜ் அனுப்பி இருக்கலாமே?
கறுப்புப்பணம் பிடிபட்டதும் நாயகன் சக ஊழியர்கள் அனைவரிடமும் செல் போனை வாங்கிக்கொள்கிறான். அப்போது வில்லன் ஒரு செல்போனைத் தந்துவிட்டு ரகசிய போனை பதுக்கி வைக்கிறான். நாயகன் எல்லோரையும் செக் செய்திருக்கலாமே? எக்ஸ்ட்ரா போன் யாரிடமாவது இருக்கிறதா என? (வில்லனைப்பிடிக்க அது தான் டிராப் எனில் ஹவுஸ் ஓனர் ஆன அந்த லேடியிடம் போன் வாங்கி இருக்கத்தேவை இல்லையே?அவள் தான் கட்டப்பட்டு இருக்கிறாளே?)
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+ அடல்ட் கண்டெண்ட் எதுவும் இல்லை. வார்த்தைப் பிரயோகஙகளில் மட்டும் எல்லை மீறல் உண்டு.
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மெதுவாக நகரும் க்ரைம் ஆக்சன் திரில்லர். வீச்சு குறைவு, பேச்சு அதிகம். ஆனால் போர் அடிக்கலை.

