

மெகா சீரியல்கள் என்ற பெயரில் சின்னத்திரை நடிகர்களும் இயக்குனர்களும் வருமானம் பெறுவதற்காக, இழுப்போ இழுப்பென்று சீரியல்களை இழுப்பது வாடிக்கையாகி விட்டது.அப்படி இழுக்கப்பட்ட காரணத்தால் டிஆர்பி (TRP)யில் ‘எதிர் நீச்சல் தொடர்கிறது’ இறங்கி விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.அதோடு மட்டுமல்ல பல சீரியல்களை ஜவ்வாக இழுப்பதாகவே பலரும் கருத்து கூறுவதை இப்பொழுதெல்லாம் பொது வெளியில் கேட்க முடிகிறது.
தீபாவளி வந்தால்,ஒரு நாள் பண்டிகையை மெகா சீரியல்கள் பல நாட்கள் கொண்டாடுவதையும்,பொங்கல் பண்டிகையை மாதக் கணக்கில் கொண்டாடு வதையும் பழக்கமாக்கி விட்டார்கள்.பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதை ஏனோ இயக்குனர்களும்,தொலைக் காட்சி நிறுவனங்களும் நினைத்துப் பார்ப்பதே இல்லை.
அதிலும் இந்த இயக்குனர்கள் ஏனோ மிகவும் கொடூரமான சிந்தனைகளுக்கு அடிமையாகி அவற்றையே தங்கள் சீரியல்களிலும் புகுத்துகிறார்கள்.தற்போதைய நடைமுறை என்ன என்பதையும்,சட்ட விதிமுறைகள் சொல்வதையும் காட்டி,மக்களுக்கு வழி காட்ட வேண்டிய அவர்கள்,நிலவும் அபத்தங்களையே அரங்கேற்றுகிறார்கள்.
-திருமணமாகி சந்தோஷமாக வாழும் தம்பதியரைப் பிரிக்க,முறைப் பெண்களும் ஏன்?மணமான பெண்ணின் மாமியாரும் கூட முயல்வது எந்தப் பண்பாட்டின் அடிப்படையில் என்பது புரியவில்லை.சிறிதோ,பெரிதோ,திரையுலகம் பண்பாட்டை சிறப்பிக்க உதவ முன்வர வேண்டும்!சீரழிக்க முயலக் கூடாது!
-காவல் துறையில்,மருத்துவத்துறையில்,ஜோதிடத் துறையில் என்று அனைத்துத் துறையினருமே வில்லன்-வில்லிகளுக்குத் துணை போவதாகவே காட்டுவது,அந்தத் துறையினரின் மேல் மேலும் வெறுப்பை வளர்ப்பதாகவே அமைந்துள்ளது.அந்தத் துறைகளில் எல்லாம் எவ்வளவோ தியாகம் செய்வோரும்,சுய நலம் பாராமல் உழைப்போரும்,நேரங் காலம் பார்க்காமல் பணி செய்வோரும் இருப்பதால் தான் ஊரும்,உலகமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.நல்லவர்களைக் காட்ட உங்களுக்குத் தடையாக இருப்பது எது?ரூ 5 ம் 10 ம் வாங்கிக்கொண்டு வைத்தியம் பார்க்கும் எத்தனை மருத்துவர்கள் இன்றைக்கும் உள்ளார்கள்.அது கூட இல்லாதவர்களிடம், காசே வாங்காமலும்,இன்னும் ஒரு படி மேலே போய் மருந்துக்கும் வழிச் செலவுக்கும்
தங்கள் பாக்கட்டிலிருந்து பணம் கொடுக்கும் பல மருத்துவர்களும் வாழ்கிறார்களே!
-கொடூரமான காட்சிகளைக் காட்டினால்தான் வில்லன்களின் தன்மை அறியப்படும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.ஆனால் வழக்கத்தில் இல்லாத,எங்கோ அபூர்வமாக நடக்கும் ஒன்றிரண்டை அரங்கேற்றி, அவற்றை உலகம் முழுவதும் காட்ட வேண்டுமா?
-எவ்வளவு விஞ்ஞான முன்னேற்றங்கள் இன்றைக்கு வந்து விட்டன.பொறியில் விழுந்த எலியைப் போல் குற்றவாளிகளை ‘கபக்’ கென்று பிடிக்கும் காலம் இது!ஒரு தொடரில், காரில் சுற்றும் அவர்களைப் பல நாட்களாகக் காவல்துறை கண்டு கொள்ளாமல் விடுவதைப் போல் காட்டுவது அபத்தமும்,அத்துறையையே அவமதிக்கும் செயலு மாகாதா?மக்கள் மத்தியில் அவர்கள் கையாலாகதவர்கள் என்று காட்டுவது தவறல்லவா?
-இது ‘கபடி காலம்’ போலும்!ஏகப்பட்ட சீரியல்கள் கபடியைத் தத்து எடுத்து விட்டன வென்றே தோன்றுகிறது.அதுவும் ஒரு சீரியலில் இரண்டு டீமும் சமமான பாயிண்டுகள் எடுத்து ‘ட்ரா’ செய்து விட,கேப்டன்கள் மட்டும் மோதும் காட்சி காட்டப்பட்டு,அவர்கள் கபடி பெயரால் அடித்துப் புரள்கிறார்கள் மைதானத்தில்.கபடி விளையாட்டில் அப்படி ஒரு ரூல் இருப்பதாகவே தெரியவில்லை.உங்கள் வசதிக்காக எதை வேண்டுமானாலும் காட்டலாம்,இந்த அப்பாவி மக்கள் பார்ப்பார்கள் என்ற எண்ணமே இது போன்ற காட்சிகளின் அடிப்படை என்றே தோன்றுகிறது.
-நல்லவற்றைக் காட்டுங்கள்.நல்ல கதைகளைத் தேர்ந்தெடுங்கள்.இளைஞர்களுக்கு நல் வழி போதிப்பதான காட்சிகளைச் சேருங்கள்.உங்கள் வழி காட்டலால் சமுதாய முன்னேற்றத்துக்கு வழி வகுத்து உதவுங்கள்.
-நம் நாட்டில்,குறிப்பாக நமது தமிழகத்தில், முன்னர் பெண்கள் அதிகமாகக் கல்வி கற்காததால் சற்று பின்தங்கியே இருந்தார்கள்.ஆனாலும் குடும்பத்தை ஆள்பவர்கள் அவர்களாகவேதான் எப்பொழுதும் இருந்திருக்கிறார்கள்.’லேடீஸ் ஃபர்ஸ்ட்’என்பது தானே நமது தாரக மந்திரம்.இப்பொழுது அதெல்லாம் வரலாறாகிப் போய் விட்டது.
ஆண்களுக்கும் மேலாகப் பெண்கள் இன்று ஆட்சி செலுத்தும் நிலை வந்து விட்டது.தேர்வுகளில் அவர்களே அதிக எண்ணிக்கையில் வெல்கிறார்கள்.வருகின்ற சீரியல்களில் அவர்களுக்கே அனைத்து முக்கியத்துவமும் கொடுக்கப்படுவது ஏற்புடையது என்றாலும்,அதனையே தொடர்வது வெறுப்பை வளர்க்கும் என்பதையும் இயக்குனர்கள் உணர வேண்டும்.
சின்னத்திரையும் வெள்ளித் திரையும் சமுதாயத்தில் மாற்றங்களை விரைவாக ஏற்படுத்தும் மகத்தான சாதனங்கள்!அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி சமுதாய வளர்ச்சிக்கு வித்திட வேண்டுமென்பதே நமது அவா!யாரையும் குறை சொல்வதல்ல
நமது நோக்கம்.சீரியலோ,சினிமாவோ!அதைத் தயாரிப்பதில் ஏகப்பட்ட சிரமங்கள் உள்ளன என்பதை அறியாதவர்கள் அல்ல நாம்! அவ்வாறு கஷ்டப்பட்டு தயாரிக்கப் படுபவை நல்வழி காட்டுவனவாக அமைந்தாலல்லவோ நல்லது!ரசிகர்களின் பொறுமையைச் சோதிப்பதாக அவை அமையக் கூடாதல்லவா?