
நாதஸ்வரம் போன்ற டாப் ஹிட் சீரியல்களை இயக்கிய திருமுருகன் தற்போது புதிதாக ஒரு சீரியலின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் மிகவும் பிரபலமாக ஓடின. அதில் ஒன்றுதான் மெட்டி ஒலி. 2002ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட இந்த தொடர், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான தொடராகும். இந்த தொடர் ஒளிபரப்பும் நேரம் வந்துவிட்டால், வரிசையாக அனைவர் வீட்டிலும் இதுவே ஓடும். 5 சகோதரிகளின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இந்தத் தொடரை திருமுருகன் இயக்கினார். இந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார் திருமுருகன். இதனையடுத்து அவர் எம்-மகன் திரைப்படத்தை இயக்கி ஒரு ஹிட் கொடுத்தார்.
பின் பரத்துடன் இணைந்து முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தையும் இயக்கினார்.
இதற்கு பின்னர் மீண்டும் இவர் சின்னத்திரை பக்கம் வந்து பல நல்ல சீரியல்களை கொடுத்தார். நாதஸ்வரம், கல்யாண வீடு, தேனிலவு, குலதெய்வம் தொடர்களை இயக்கி வெற்றிக் கண்டார். இவர் இயக்கிய அனைத்து சீரியல்களுமே டாப் ஹிட்டாகின.
திருமுருகன் சமீபத்தில் யூட்யூப் பக்கத்தில் தான் அடுத்து ஒரு சீரியலை இயக்கவிருப்பதாக அறிவித்தார். ஒருவேளை மெட்டி ஒலி 2 ஆக இருக்குமோ என்று பலரும் எண்ணினர். ஏனெனில், இவருடைய மெட்டி ஒலி சீரியலே இவர் இயக்கிய அனைத்து படங்கள் சீரியல்களிலையே மிகவும் ஹிட்டானது.
சமீபத்தில்கூட இந்த சீரியலின் பாட்டு சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. இதற்கு பலரும் ரீல்ஸ் செய்து பதிவிட்டனர். ஆகையால், இந்த சீரியல் மீண்டும் ரசிகர்களுக்கு நினைவுப்படுத்தப்பட்டதோடு, 2k கிட்ஸுக்கும் இந்த தொடர் ஒரு காலத்தில் பிரபலமாக ஓடியது தெரியவந்தது.
ஏற்கனவே இரண்டு வருடங்களாக இந்த சீரியலின் இரண்டாம் பாகம் எடுக்கலாமா என்ற பேச்சுகள் எழுந்தன. இந்தநிலையில், சமூக வலைதளங்களில் ட்ரெண்டான பிறகு முழு மூச்சுடன் பேச்சுவார்த்தையில் இறங்கினர்.
ஆனால், மெட்டி ஒலி விரைவில் வரும், அதனை இயக்குவது திருமுருகன் அல்ல என்று பேச்சு இருந்தது. ஆனால், இப்போது திருமுருகன் ஒரு சீரியலின் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளதாக தகவல் வந்திருக்கிறது.
விரைவில் என்ன சீரியல் என்பதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றே சொல்லப்படுகிறது.