கமல்ஹாசன் குரலில்.. செஸ் விழா மேடையில் மாயாஜாலம்!

கமல்ஹாசன் குரலில்.. செஸ் விழா மேடையில் மாயாஜாலம்!

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான துவக்க விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு விழாவைத் துவக்கி வைத்தார்.

இந்த துவக்கவிழா நிகழ்ச்சியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டாலும், சங்க காலம் முதல் சம காலம் வரையிலான தமிழர்களின் வரலாற்றைச் சொன்ன கலைநிகழ்ச்சியும் அதற்கு பின்னணியாக கமல்ஹாசனின் வர்ணனைக் குரலும் அனைவரையும் கவர்ந்தது

கமல்ஹாசன் குரலில், கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எனத் தொடங்கிய அந்நிகழ்ச்சி, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் நாகரீகத்தில் தொடங்கி காட்சிகளாக விரிந்தது. சோழ, சேர, பாண்டியர் என மூவேந்தர்கள் பற்றி கமல் விவரிக்க, அம்மன்னர்களின் சின்னங்கள் கொண்ட கொடிகளை அசைத்தபடி கலைஞர்கள் ஆடி அசத்தினர்.

ராஜேந்திர சோழனின் கடல் பயணங்கள், பண்டைத் தமிழரின் கடல் கடந்த வணிகம், காலத்தால் அழியாத கல்லணை என அடுக்கடுக்காக தமிழரின் வரலாறு ஒலிக்க, அதற்கேற்ப மேடையில் மலர்ந்த காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தின.

சிலம்பாட்டம், ஏறு தழுவுதல், பரத நாட்டியம், நாட்டுப்புறக் கலைகள் என வீர விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் குறித்து கமல் தன் குரலில் விவரிக்க, அதற்கேற்ப நிகழ்ந்த ஒளி ஜாலங்களும், நடன அசைவுகளும் காண்போரை கவர்ந்தன.

மொத்த கலைநிகழ்ச்சிகளின் ஹைலைட்டாக இந்நிகழ்ச்சி அமைந்தது என்றால் மிகையில்லை.

logo
Kalki Online
kalkionline.com