தொலைக்காட்சித் தொடர்கள் மிகவும் பிற்போக்குத்தனமானவை: நடிகை ஷர்மிளா தாகூர்!

தொலைக்காட்சித் தொடர்கள் மிகவும் பிற்போக்குத்தனமானவை: நடிகை ஷர்மிளா தாகூர்!

ஷர்மிளா தாகூர் புகழ்பெற்ற இந்தி திரைப்பட நடிகைகளில் ஒருவர். இவர் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணித்தலைவருமாக இருந்த நவாப் மன்சூர் அலிகான் பட்டோடியை மணந்தார். இவர்களுக்கு சயீஃப் அலிகான், சோஹா அலிகான் என ஒரு மகனும், மகளும் உண்டு. சயீஃப் அலிகான் சமீபத்தில் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தில் ராவணனாக நடித்திருந்தார். மகள் சோஹாவும் நடிகையே! இவர்கள் குடும்பத்தில் நடிகை சாரா அலி கான் மூன்றாம் தலைமுறை வாரிசாக நடிக்க வந்தாயிற்று.

ஷர்மிளா தாகூர் தன்னுடைய நடிப்புக்காக பல தேசிய திரைப்பட விருதுகள், பிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவில் தலைமைப் பதவியும் வகித்துள்ளார்.

அத்துடன் டிசம்பர் 2005 ஆம் ஆண்டில் அவர் யூனிசெஃப் நல்லெண்ண தூதராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவில்லை என்ற போதும் திரைத்துறை சார்ந்த நிகழ்வுகளிலும், முதியோருக்கான சேவை அமைப்புகள் சார்ந்த நிகழ்வுகளிலும் ஷர்மிளா பங்கேற்கத் தவறுவதில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘குல்மோஹர்’ எனும் இந்தி திரைப்படத்தில் ஷர்மிளா நடித்திருந்தது குறிப்பிடத் தக்கது. இவர் சமீபத்தில் ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அச்சு ஊடகங்கள் அவரிடம் நேர்காணல் நடத்தி பல்வேறு விஷயங்கள் குறித்த அவரது கருத்துக்களைப்பதிவு செய்திருந்தன. அதில் ஷர்மிளா மனம் திறந்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.

அதிலொன்று தான் இன்றைய தொலைக்காட்சித் தொடர்களின் உள்ளடக்கம் குறித்து அவர் பகிர்ந்த கருத்து.

“இன்றைய தொலைக்காட்சித் தொடர்கள் மிகவும் பிற்போக்குத்தனமானவை என்கிறார் ஷர்மிளா. காரணம் இன்றைய தொடர்களில் பெண்களே பெண்களின் மிக மோசமான எதிரிகள் என்பதாக சித்தரிக்கப்படுகிறது. இது மிகவும் துரதிருஷ்வசமானது.நானும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் கவுன்சிலில் ஒரு அங்கமாகப் பணியாற்றி உள்ள நிலையில் இது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாக உள்ளது. அரசாங்கம் இதைத் தொடர்ந்து கவனித்து வருகிறது. மக்கள் சில நேரங்களில் தொலைக்காட்சி தொடர் உள்ளடக்கங்கள் குறித்துப் புகார் அளித்து சம்மந்தப்பட்ட இயக்குநர்களிடம் கண்டனத்துக்குரிய அல்லது சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கச் சொல்லி கோருகிறார்கள். தங்களது கண்டனத்தைப்பதிவு செய்கிறார்கள். ஆனால்,

தயாரிப்பாளர்களோ வணிக நோக்கில் எப்போதும் அதை எதிர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள்.”

- என்று ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com