சில படங்களுக்கே லட்சக்கணக்கில்தான் பட்ஜேட்டே இருக்கும். ஆனால், இங்கு ஒரு படத்தின் பூஜைக்கே 1 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அப்படியென்றால், அதன் பட்ஜெட் என்னவாக இருக்கும் என்று யோசித்து பாருங்களேன்.
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கிய மூக்குத்தி அம்மன் படம் 2020ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் பாலாஜி ஆகியோர் சேர்ந்து நடித்த காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன. அதேபோல் அம்மாவாக நடித்த ஊர்வசி மற்றும் மூன்று அக்கா தங்கைகளின் எதார்த்தமான நடிப்புகள் தனித்துவமாக இருந்தன. ஒரு நல்ல என்டெர்டெயின்மென்ட் படமாகவும், அதேசமயம் ஒரு நல்ல கருத்தைக் கொடுத்த படமாகவும் மூக்குத்தி அம்மன் இருந்தது.
ஒருமூச்சு மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து அம்மன் கதாப்பாத்திரங்களில் நடித்தனர். அதன்பின்னர் நீண்டக் காலம் சாமி படங்கள் வராமல் இருந்தன. அப்படி வந்தாலும் அவ்வளவாக ஹிட் கொடுக்கவில்லை. அந்தவகையில் மூக்குத்தி அம்மன் படத்தின்மூலம் மீண்டும் ஒரு அம்மன் படம் கம்பேக் கொடுத்தது அனைவரையும் ரசிக்க செய்தது. குறிப்பாக இப்படம் கொரோனா காலத்தில் வந்ததால், ஒடிடியில் மட்டுமே வெளியானது. இருப்பினும், ரசிகர்களின் பேராதரவை பெற்றது.
இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை குறித்த பேச்சு எழுந்தது. முதலில் இதன் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி என்றும், நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், சில காரணங்களால், அந்த குழு அப்படியே ஒதுங்கிவிட்டது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி எடுக்கவுள்ளாராம். நயன்தாராவே மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார் என்பது உறுதியானது. பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா ஆகியோர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் பூஜை ரூ. 1 கோடி செலவில் நடைபெற்றதாகவும் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாகவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நயன்தாரா இதற்காக விரதம் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.