

இந்தியாவில் இந்த ஆண்டு (2025) கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை முன்னணி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் படங்களை பின்னுக்கு தள்ளி பாலிவுட் படங்கள் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. இந்த பட்டியலில் தமிழ் படம் ஒன்று மட்டுமே இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 திரைப்படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
* காதல் படமான ‘சையாரா’ இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. மோஹித் சூரி இயக்கிய இந்த படத்தில், அஹான் பாண்டே மற்றும் அனீத் பாட்டா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதலின் சவால்களையும், வாழ்க்கையின் சிக்கல்களையும் சித்தரிக்கும் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.
* ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்த காந்தாரா: சாப்டர் 1 இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவையா, பிரமோத் ஷெட்டி, சம்பத்ராம் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் உலகளவில் இதுவரை ரூ.810+ கோடி வசூல் செய்துள்ளது.
* லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான ‘கூலி' 3-ம் இடத்தை பிடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 திரைப்படங்களின் பட்டியலில் இந்த ஒரு தமிழ் படம் மட்டுமே இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* ஜூனியர் என்டிஆரின் முதல் பாலிவுட் படமான ‘வார் 2’வும் இந்த பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷனும் இணைந்து ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார். அயன் முகர்ஜி இயக்கிய இந்த படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸின் கீழ் ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வி அடைந்தது.
* காதல் படமான ‘சனம் தேரி கசம்' இந்த பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. 2016-ல் வெளியான இந்த படம், 2025-ல் மீண்டும் வெளியாகி மிகப்பெரியளவில் வெற்றி பெற்றதுடன் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. 2025-ன் அதிகம் தேடப்பட்ட மற்றும் வசூலித்த படங்களில் ஒன்றாக மாறியது, குறிப்பாக அதன் மறுவெளியீட்டின் மூலம் சாதனை படைத்தது.
* மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிப்பில் ஹனீஃப் அதேனி இயக்கத்தில் வெளியான மார்கோ திரைப்படம் 6-வது இடத்தை பிடித்துள்ளது. யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
* அக்ஷய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தர்மேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள பாலிவுட் திரைப்படம் ஹவுஸ்புல்-5 இந்த பட்டியலில் 7-வது இடத்தை பிடித்துள்ளது. தருண் மன்சூகானி இயக்கத்தில் உருவான இந்த நகைச்சுவை திரைப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
* ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் கதையில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம் இந்த பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது. எஸ்.ஜே. சூர்யா, நடிகை கியாரா அத்வானி நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க, தில் ராஜூ தயாரித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.
* சன்யா மல்ஹோத்ரா நடித்த 'மிஸஸ்'(Mrs) என்ற பாலிவுட் திரைப்படம் இந்த பட்டியலில் 9-வது இடத்தை பிடித்துள்ளது. மலையாளத்தில் வெளியான The Great Indian Kitchen படத்தின் இந்தி ரீமேக்கான இந்த படம், திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் 'மிஸ்' என்பதிலிருந்து 'மிஸஸ்' ஆக மாறும்போது, அந்த பெண் சந்திக்கும் அதிகாரம், அடக்குமுறை மற்றும் அடையாள இழப்பு போன்ற பிரச்சினைகளை நுணுக்கமாக பேசுகிறது.
* ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், அஷ்வின் குமார் இயக்கத்தில் அனிமேஷன் திரைப்படமாக வெளியான மகாவதார் நரசிம்மா இந்த பட்டியலில் 10-வது இடத்தை பிடித்துள்ளது. இது விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான 3D அனிமேஷன் புராணப் படமாகும். ரூ.15 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.