23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11 முதல் டிசம்பர் 18 வரை நடைபெற உள்ளது. இதில் 27 மொழிகளில் இருந்து, 51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன என்று சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குனர் ஆனந்த் வெங்கடசாமி கூறியுள்ளார். இதில் 13 விருதுகள் வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் இந்த விழாவை நடத்துகிறது. சென்னையில் ராயப்பேட்டை பிவிஆர், சிட்டி சென்டர் INOX மற்றும் சத்யம் தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படுகின்றன.
உலக சினிமாவையும், புதுமையான கதையாடல்களையும் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணத்துடன் நடைபெறும் 23 வது சென்னை திரைப்பட விழாவில் தமிழிலிருந்து வேம்பு, மாயகூத்து, மருதம், அலங்கு, காதல் என்பது பொதுவுடமை, டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன், 3 பிஎச்கே(BHK), ஒன்ஸ் அபான் டைம் இன் மெட்ராஸ், மெட்ராஸ் மேட்னி, பறந்து போ, பிடி மண் ஆகிய 12 படங்கள் தமிழ் பிரிவில் போட்டி போடுகின்றன.
இந்த திரைப்பட விழாவை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் உலக திரைப்பட போட்டிக்கான சிறப்பு விருதுகள் விழா நிறைவு நாளில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தொடக்க விழாவில் தாரிக் சலேவின் 'ஈகிள்ஸ் ஆஃப் தி ரிபப்ளிக்' சிறப்பு திரைப்படமாக திரையிடப்பட உள்ளது. நிகழ்ச்சியின் இறுதி நாளான 18 ஆம் தேதி அன்று மார்செல் பரேனாவின் 'EL 470 படம் திரையிடப்பட உள்ளது. மொத்தம் 51 நாடுகளில் இருந்து 122 படங்கள் திரையிடப்படுகின்றன. அதில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 14 படங்களும் அடங்கும்.
மேலும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற 3 திரைப்படங்களும், கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற 6 திரைப்படங்களும் திரையிடப்படும். முதல் முறையாக உலக சினிமா பிரிவில் பின்லாந்து, பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா, ஜோர்டான், நேபாளம், மியான்மர் போன்ற நாடுகளின் திரைப்படங்களும் இந்த விழாவில் இடம்பெற உள்ளன. மேலும் இந்திய பனோரமா பிரிவில் பீகாரிலிருந்து தேர்வு செய்யப்பட்ட போஜ்புரி மொழி திரைப்படம் திரையிடப்பட உள்ளது.
நடிகர் ரஜினிகாந்தினுடைய 50 ஆண்டு காலத் துறை பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் மெகா ஹிட் திரைப்படமான 'பாட்ஷா'வும் திரையிடப்பட உள்ளது. அத்துடன் எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்ப மைய மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் விதத்தில் 6 குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன.