

மே 14, 1976. தமிழ் சினிமா வரலாற்றில் அது மற்றுமொரு சாதாரண வெள்ளிக்கிழமை அல்ல; ஒரு சகாப்தம் கருக்கொண்ட நாள். "அன்னக்கிளி உன்னைத் தேடுதே..." என்று ஒரு கிராமத்து மெட்டில் அன்று தொடங்கிய அந்த எளிய இசைப்பயணம், பின்னாளில் உலக இசை வரைபடத்தில் தமிழுக்கென்று ஒரு தனித்துவமான முகவரியை உருவாக்கும் என்று அன்று யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், இளையராஜாவின் இசைக்கு மட்டும் வயதே ஆகவில்லை. அது இன்றும் நேற்று கேட்டது போன்றே புத்துணர்வோடு நம் செவிகளில் ஒலிக்கிறது.
தமிழ் சினிமா இசையின் போக்கை 'ராஜாவுக்கு முன், ராஜாவுக்கு பின்' என தாராளமாகப் பிரிக்கலாம். அவர் வருவதற்கு முன்பு பாடல்கள் வெறும் 'மெட்டுகளாக' (Tunes) மட்டுமே இருந்தன. ராஜா வந்த பிறகுதான் அவை ஒரு 'ஒலி உலகமாக' (Sonic Landscapes) மாறின. கிராமிய இசையை வெறும் ஒரு சுவையாக (Folk flavour) மட்டும் பார்க்காமல், அதை மேற்கத்திய ஆர்கெஸ்ட்ரேஷனுடன் (Orchestration) இணைத்து ஒரு புதிய உயரத்திற்குத் தூக்கினார் ராஜா. நாதஸ்வரம், தவில், உருமி போன்ற மண்ணின் வாத்தியங்களுடன் மேற்கத்திய ஹார்மனியை (Harmony) மிக லாவகமாக அவர் கோர்த்த விதம் அபாரமானது. 'மச்சானைப் பார்த்தீங்களா' போன்ற பாடல்களை இன்று இசை ஆராய்ச்சியாளர்கள் பிரித்துப் பார்க்கும் போதுதான், அதன் பின்னணியில் ஓடும் அந்த 'Chord structures' மற்றும் 'Counter melodies' எவ்வளவு மேன்மையானவை என்பது புரிகிறது.
கர்நாடக இசை ராகங்கள் என்றாலே அவை வெறும் இசை மேடைகளுக்கும், வித்வான்களுக்குமானவை என்ற பிம்பத்தை உடைத்தவர் இளையராஜா. ராகங்களைப் பாடப் புத்தகங்களில் இருந்து விடுவித்து, சாதாரண தேநீர் கடை ரேடியோக்களுக்குக் கொண்டு வந்த பெருமை அவரைச் சேரும். மோகனம், கீரவாணி, சாருகேசி போன்ற ராகங்களை அவர் கையாண்ட விதம் ஒரு மேஜிக்.
ரீதி கௌளையில் "சின்ன கண்ணன் அழைக்கிறான்" என்றால் மோகனத்தில் "கண்ணன் ஒரு கைக்குழந்தை".
கீரவாணியில் கேட்ட "காற்றில் எந்தன் கீதம்", கல்யாணியில் "காற்றில் வரும் கீதமே" ஆனது.
"மயங்கினேன் சொல்ல தயங்கினேன்" என உருக்கிய சாருகேசி, "காதலின் தீபம் ஒன்று" என மயக்கியது.
இசை இலக்கணம் தெரியாத பாமரனையும் ஒரு ராகத்தைக் காதலிக்க வைத்ததே ராஜாவின் வெற்றி.
இளையராஜாவை உண்மையில் ஒரு 'Symphonic thinker'. ஒரு நான்கு நிமிடப் பாடலுக்குள்ளேயே சிம்பொனிக்கான அத்தனை இலக்கணங்களையும் அவர் பொருத்திவிடுவார். 'இளைய நிலா' பாடலின் கிடார் இசையாகட்டும், 'How To Name It?' அல்லது 'Nothing But Wind' போன்ற ஆல்பங்களாகட்டும்... அவர் வெறும் பாடல்களை அமைக்கவில்லை; ஒரு 'ஒலி கட்டடக்கலையை' (Sound Architecture) உருவாக்கினார். அன்னக்கிளியில் மண்வாசனையுடன் தொடங்கிய பயணம் லண்டன் சிம்பொனி வரை நீண்டாலும், 'நிலா அது வானத்து மேல..' போன்ற துள்ளல் இசையையும் அவரால் கொடுக்க முடிந்தது.
70-களில் நாட்டுப்புற இசைப் புரட்சி, 80-களில் மெலடி மழை, 90-களில் மின்னணு இசைத் தொழில்நுட்பம் என ஒவ்வொரு தசாப்தத்திலும் ராஜா தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டே இருந்தார்.
50 ஆண்டுகள் என்பது வெறும் ஒரு எண்ணிக்கை அல்ல; அது ஒரு கலாச்சார நினைவகம். நாம் காதலித்த தருணங்கள், தனிமையில் அழுத இரவுகள், பேருந்துப் பயணங்கள் என நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவின் பின்னணியிலும் ராஜாவின் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த 50 வருடங்கள் ஒரு இசையமைப்பாளரின் பயணம் மட்டுமல்ல; இது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்ச்சிப் பெருக்கின் வரலாறு.
அவரது இசைப்பயணம் மேலும் இனிதாக தொடர, அவர் வணங்கும் அந்த அண்ணாமலையானை நாமும் வேண்டுவோம்.