ஒரு படத்திற்கு 77 விருதுகளா? 

‘சஷ்தி’ குறும்பட விழாவில் ஆச்சர்யப்பட்ட கே.பாக்யராஜ்!
கே.பாக்யராஜ்
கே.பாக்யராஜ்
Published on

குறும்படங்கள் சினிமாவில் நுழைவதற்கான விசிடிங் கார்டு என்று சொல்வார்கள். அந்த வகையில் ஒரு சார்ட்டட் அக்கவுன்டன்ட் ஆக 30 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவரான ஜூட் பீட்டர் டேமியான், டைரக்‌ஷன் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவில் நுழையும் முதல் படியாக  ‘சஷ்தி’ என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

Cathy & Raphy பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள இந்தக் குறும்படம். 30 நிமிடங்கள் ஓடும். செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, டாக்டர் SK காயத்ரி, ஹாரிஸ், மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘சஷ்தி’ குறும்படம் கிட்டத்தட்ட 35 சர்வதேச  திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 77 விருதுகளை வென்றுள்ளது.

கே.பாக்யராஜ்
கே.பாக்யராஜ்

தாய்க்கும் மகனுக்குமான உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்த ‘சஷ்தி; குறும்படம். தான் வளர்ப்பு மகன் என்பதை அறியாமலேயே வளரும் சிறுவன் ஒருவன், சாதாரணப் பெண்ணாக இருக்கும் ஒருவரை எப்படிக் கடவுள் என நினைக்கும் அளவுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரைப் பற்றிய அவனுடைய அபிப்ராயங்கள் எப்படி மாறுகின்றன என்பதைச் சொல்கிறது இந்தக் குறும்படம்.

இந்தக் குறும்பட திரையிடலுடன் கூடிய பத்திரிக்கையாளர் சந்திப்பும் விருது பெற்ற கலைஞர்களை கவுரவிக்கும் நிகழ்வும் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டார். மேலும் இந்தக் குறும்படத்தில் பணியாற்றி பல்வேறு பிரிவுகளில் சர்வதேச விருதுகளை வென்ற கலைஞர்களுக்கு அந்த விருதுகளை இயக்குனர் கே.பாக்யராஜ் வழங்கி கௌரவித்தார்.

இதைத்தொடர்ந்து இயக்குனர் ஜூட் பீட்டர் டேமியான் பேசும்போது,

“இந்த குறும்படத்திற்கு ஏதோ ஒன்றிரண்டு விருதுகள் மட்டும்தான் நான் எதிர்பார்த்தேன். ஆனால் ஆச்சரியமாக இவ்வளவு விருதுகள் இதற்கு கிடைத்துள்ளன.  இந்தக் குறும்படம் வெறும் 30 நிமிடத்திற்குள் ஓடும் விதமாக இருந்தாலும் - ஒரு வாரத்திற்குள்ளேயே படமாக்கி முடித்து விட்டாலும் - இதற்கான கதை மற்றும் திரைக்கதையை உருவாக்கக் கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கும் மேல் ஆனது.

படப்பிடிப்பின்போதே லைவ் ரெக்கார்டிங் முறையில் வசனங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. நல்ல நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களால் தான் இத்தனை விருதுகள் எங்களுக்கு சாத்தியமானது.

அடிப்படையில் நான் ஒரு சார்ட்டட் அக்கவுன்டன்ட் என்றாலும் சினிமா மீதான ஆர்வத்தால் இந்தக் குறும்படத்தை இயக்க முடிவு செய்தேன். அதற்காக எல்வி பிரசாத் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து டைரக்ஷன் கோர்ஸ் கற்றுக்கொண்டு அதன்பின் இந்த குறும்படத்தை இயக்கினேன்” என்றார்.

இயக்குனர் கே.பாக்யராஜ் பேசும்போது,

“வெறுமனே படம் இயக்க ஆசைப்பட்டால் மட்டும் போதாது என அதற்காக ஒரு கோர்ஸ் படித்துவிட்டு ஜூடு பீட்டர் டேமியன் அதை செய்திருக்கிறார் என்பது இன்னும் ஆச்சரியப்படுத்துகிறது.

இந்தக் குறும்படத்தைப் பார்த்தபோது கடைசியாக அந்தச் சிறுவன் தனது தாய் பற்றிக் கேட்கும் கேள்வி மட்டும் சற்று நெருடலாக இருந்தது. தாயின் அன்பைச் சந்தேகப்பட்டாலும் அது கொஞ்சம் வேறு மாதிரி இருந்திருக்கலாமோ என்கிற எண்ணமும் தோன்றியது. இயக்குனர் ஜூடு பீட்டர் டேமியன் சினிமாவிலும் கால் பதித்து மிகப்பெரிய வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்” என்று கூறினார்

இந்தக் குறும்படத்தை https://apple.co/3PpIXnJ என்கிற லிங்க் மூலம் iTunesலும் https://bit.ly/3JXXoOD என்ற லிங்க் மூலம் Google Playயிலும் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com