சில ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஸ்ரீபதி இலங்கை அணியின் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முடிவு செய்தார்.படத்திற்கு 800 என்று பெயர் வைத்தார்.
முத்தையா முரளிதரன் 800 விக்கெட் கிரிக்கெட் விளையாட்டில் எடுத்து சாதனை புரிந்ததால் இந்த தலைப்பு வைக்கப்பட்டது. விஜய் சேதுபதிதான் ஹீரோ என முடிவு செய்து முத்தையா முரளிதரன் போன்ற கெட் அப்பில் விஜய் சேதுபதியின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது .
விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிக்க கூடாது என சில ஈழ ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.இந்த எதிர்ப்பின் விளைவாக விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதில் இருந்து பின் வாங்கினார். தற்போது ஸ்ரீபதி, மாதுர் மிட்டல் என்பவரை, முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிக்க வைத்து படத்தை வெளியிட உள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இந்த சந்திப்பில் பேசிய முத்தையா முரளிதரன் "இந்த படம் ஆரம்பம் முதல் பல்வேறு தடங்கல்கள் வந்து கொண்டிருக்கின்றன.தடங்கல்கள் எனக்கு ஒன்றும் புதிது அல்ல. நான் ஆறு வயது முதல் பதினெட்டு வயது வரை விடுதியில் தங்கி படித்தேன். அப்போதே பல்வேறு தடைகளை சந்திக்க தொடங்கி விட்டேன் தடைகள் எல்லாமே வெற்றிக்கு தான். விஜய் சேதுபதி விலகியது முதல் இன்று படம் முடிவடைந்து உங்கள் முன் நிற்பது வரை பல்வேறு தடைகளை தாண்டிதான் வந்துள்ளது. முதல் முயற்சியில் வெற்றி வந்து விட்டால் உங்களுக்கு வெற்றியின் மதிப்பு தெரியாது.
இலங்கையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை படக்குழுவினர் சந்தித்தனர். என் தொழிலுக்கு தேவையான டீசலை தந்து உதவினேன். இப்படி பரஸ்பர உதவிகள் செய்துதான் 800 படம் வந்துள்ளது.நான் பலருக்கு ரோல் மாடல் என்கிறார்கள். எனக்கு ரோல் மாடல் சச்சின்தான். ஒரு விஷயத்தில் வெற்றி பெற என்ஜாய், டெடிகேசன், டிசிப்ளின் வேண்டும் என்பார் சச்சின். இதை தாரக மந்திரமாக எடுத்து கொள்கிறேன்.இரண்டேமுக்கால் மணி நேர படத்தில் 20 நிமிடங்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாட்டு காட்சிகள் வருகின்றன. மற்ற அனைத்தும் நான் சந்தித்த சவால்களாக இருக்கும்" என்றார்.
இப்படத்தில் மஹிமா நம்பியார், வடிவுக்கரசி, நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.R. D. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஹீரோ மாதுர் மிட்டல் ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம் டாக் மில்லயனர் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிட்டதக்கது.