பிரம்மாண்டமாக பல கோடி ரூபாய் செலவு செய்து சினிமா படம் எடுத்துக் கொண்டிருந்தவர்களின் மத்தியில், குறைந்த பட்ஜெட்டிலும் தரமான வெற்றிப் படத்தைத் தர முடியும் என்று தனது, ‘பசங்க’ படத்தின் மூலம் நிரூபித்தவர் பாண்டிராஜ். அதைத் தொடர்ந்து அவர், அருள்நிதி நடித்த வம்சம், சிவகார்த்திகேயன் நடிப்பில் மெரீனா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆளு, கதகளி போன்ற திரைப்படங்களை இயக்கினார். அந்த வகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம்தான் அவர் இயக்கிய கடைசி வெற்றிப்படம். அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
அதன் பிறகு தம் கையில் படங்கள் ஏதும் இல்லாததால் பாண்டிராஜ் தனது சொந்த ஊரான திருமயம் சென்று, அங்குள்ள தம் விவசாய நிலத்தில் விவசாயப் பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டதாக சினிமா வட்டாரத் தகவல்கள் சொல்கின்றன. இது குறித்து சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கூட அவர், “என் நண்பன் ஒரு நாள், ‘நீ தேசிய விருது முதல் பல விருதுகளைப் பெற்றுவிட்டாய். மேலும் பெரிய பெரிய நடிகர்களை வைத்தும் படம் இயக்கி விட்டாய். இதனால் உனது வாழ்வின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறி இருக்கலாம். ஆனால், உனது பெற்றோர்களின் ஆத்மா சாந்தி அடைந்து இருக்கும் என நீ நம்புகிறாயா?’ என்று கேட்டான். எனது நண்பன் கேட்ட அந்த ஒரு கேள்விதான் சென்டிமெண்டாக என்னை யோசிக்கச் செய்தது. இனி விவசாயம் செய்ய வேண்டும் என்ற முடிவையும் எடுக்க வைத்தது.
ஊரில் எனது பெற்றோர் வாழ்ந்த எங்களது நிலத்தைப் பார்த்தபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதில் மது அருந்திவிட்டு பாட்டில்களைப் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். சிலர் சாராயம் காய்ச்சுகிறார்கள். அதனாலேயே அந்த நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதில் நிறைய சிக்கல்களையும் சந்தித்தேன். பணமும் உழைப்பும் நிறையவே செலவானது. ஆனால், எனது விடாத முயற்சியினால் அதிலும் வெற்றி பெற்றேன். மனம் தளராமல் இருப்பதுதான் விவசாயத்தின் சக்தி. இந்த வருடம் 114 மூட்டை நெல் அறுவடை செய்தேன்.
எனது மனைவி விவசாயத்துக்கான அத்தனை செலவையும் எழுதி வைத்திருந்தார். அதைக் கணக்கிட்டு, ‘இந்த வருடம் நமக்கு லாபம்’ என்று கூறினார். சினிமா எடுத்து பல கோடிகள் சம்பாதித்து கிடைத்த மகிழ்ச்சியை விட, விவசாயம் செய்து அதன் மூலம் வரும் நெல்லில் சாப்பிடும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே அதிகமாக இருக்கிறது” என்று பாண்டிராஜ் பேசியிருக்கிறார். தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் விவசாயம்தான் செய்யப்போகிறாரா? அல்லது மீண்டும் படம் இயக்க சினிமாவுக்கு வரப்போகிறாரா என்பது போகப்போகத்தான் தெரியும்!