பர்ஹானா - பெண்களுக்கான எச்சரிக்கை மணி!

திரை விமர்சனம்
பர்ஹானா - பெண்களுக்கான எச்சரிக்கை மணி!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜித்தன் ரமேஷ் நடிப்பில் நாளை ( மே 12) வெளியாகவுள்ள திரைப்படம் "பர்ஹானா"

கண்டிப்பும் கட்டுப்பாடுகளும் நிறைந்த முஸ்லீம் குடும்பத்தில் கணவர் (ஜித்தன் ரமேஷ் ) மற்றும் மூன்று குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார் பர்ஹானா (ஐஸ்வர்யா ராஜேஷ் ) . குடும்ப கஷ்டங்கள் காரணமாக கால் சென்டரில் வேலைக்கு செல்கிறார் பர்ஹானா. ஒரு கட்டத்தில் தனது குழந்தையின் உடல் நிலை காரணமாக மருத்துவ செலவினை ஈடுகட்ட அதிக வருமானம் கிடைக்கும் மற்றொரு டிபார்ட்மென்டிற்கு வேலையை மாற்றி கொள்கிறார். அங்கே தான் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.

அது ஆண்களுக்கான செக்ஸ் உரையாடல்கள் நடக்கும் விபரீதமான கால் சென்டர் பணி என்பதை உணருகிறார் பர்ஹானா . வேலை பிடிக்கவில்லை என விலக நினைக்கும் போது , பாலைவனத்தில் பொழியும் ஐஸ் மழை போல ஒரு அழகான நட்பு அங்கே துளிர் விடுகிறது. இறுக்கமான வாழ்வியல் சூழலை கொண்ட பர்ஹானா அந்த நட்பு உரையாடலில் சற்று ஆசுவாசம் கொள்கிறார். அதன் பிறகு அங்கே அவருக்கு மற்றொரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. பர்ஹானா அதிலிருந்து எப்படி சமயோஜிதமாக மீள்கிறார் என்பதே மீதி கதை.

பார்ஹானாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் வழக்கம் போல அசத்தல் நடிப்பை வழங்கியுள்ளார். சற்று தடம் மாறும் மனத்தில் தோன்றும் குற்ற உணர்ச்சியை முகத்தில் காட்டுவதாகட்டும் , கணவனிடம் , குடும்பத்திடம் பயந்து நடுங்குவதாகட்டும் அனாயசமாக நடிப்பினை கையாள்கிறார். கணவராக ஜித்தன் ரமேஷ் அலட்டல் இல்லாத நடிப்பு. ஐஸ்வர்யா தத்தா மற்றும் அனு மோல் இருவரும் கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் நெல்சன் ஒரு புதுமையான கதை களத்தினை மிக திறம்பட கையாண்டு நம்மை சீட்டு நுனிக்கு நகர்த்தி செல்கிறார். கத்தி மேல் நிற்கும் கதை களம். சற்று அசந்தாலும் ஆட்டம் கொள்ள வைக்கும் திரைக்கதை அமைப்பு. மிக கவனமாக கையாண்டிருக்கிறார். கதை குறித்து சில மாறுபட்ட விமர்சனங்கள் சிலருக்கு தோன்றலாம்.

பெண்கள் எப்போதும் எங்கேயும், நூறு சதவீத விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே படத்தின் மைய கரு. மொத்தத்தில் "பர்ஹானா" பெண்களுக்கான ஒரு எச்சரிக்கை மணி....!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com