கார்ப்ரேட் நிறுவனமும், போலீஸ் என்ற அதிகார வர்க்கமும் சேர்ந்தால் என்ன ஆகும்? அதிகார வர்க்கம் கார்ப்ரேட்டிடம் அடிபணியும், எளிய மக்களின் உரிமைகள் நசுக்கப்படும். இந்த வலியை ஆர்ப்பாட்டம் இல்லாமல் யதார்த்தமாக பதிவு செய்து வெற்றி பெற்றுள்ளார் டைரக்டர் ராமநாத் பழனியப்பன்.
கட்டிட தொழிலாளியான பச்சமுத்து (கருணாஸ் ) தன் மனைவி துளசியை (ரித்விகா ) பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கிறார். அங்கே குழந்தையை பெற்றெடுத்த துளசி காணாமல் போகிறார்.
உதவிக்கு வந்த சரோஜாவும் (இனியாவும் ) மருத்துவமனை வளாகத்தினுள் பிணமாக மீட்டு எடுக்கப்படுகிறார். துளசிக்கும் வேறொரு நபருடன் தவறான தொடர்பு இருப்பதாகவும், அந்த நபருடன் துளசி ஓடி போய்விட்டாதாகவும், காவல் துறை கதை தயாரித்து வழக்கை மூடி விடுகிறது.
இதை நம்பாத பச்ச முத்து தொடர்ந்து காவல் துறையின் கதவுகளை தட்டுகிறான். துளசிக்கு என்ன ஆனது? என்பதை சஸ்பென்ஸ் மற்றும் அழகியலுடன் சொல்லி இருக்கிறார் டைரக்டர் ராமநாத் பழனி.
ஒரு குழந்தையை கையில் வைத்து கொண்டு காவல் நிலையத்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் போதும் தன் மனைவி எப்படியும் கிடைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கும்போதும் கருணாஸ் நடிப்பில் நம் நெஞ்சை தொடுகிறார்.
காமெடியனாக மட்டும் கருணாஸை இதுவரை பார்த்து வந்தோம். கருணாஸ் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அற்புதமான நடிகர்.
ஏட்டையா முகம்மது யூசுப்பாக வரும் அருண்பாண்டியன் நமது மனசாட்சியின் குரலாக இருக்கிறார். உமா ரியாஸ்கான், ரித்விகா, இனியா, இன்ஸ்பெக்டராக நடிப்பவர் என அனைவரும் இயல்பாக நடிக்கிறார்கள் .
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் உணர்வுகளை சரியாக கடத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தியாவின் அரசு எந்திரங்கள் எப்போதும் சிஸ்டம் என்ற ஒரு விஷயத்தை மையமாக கொண்டே செயல் படுகின்றன.
இந்த சிஸ்டம் ஒரு போதும் எளிய மக்களின், உரிமைகளையும், நியாயத்தையும் தருவது இல்லை என நேர்மையாக பதிவு செய்து இருக்கிறது ஆதார்.