நிஜ நாயகன் நஜீப்பை சந்தித்துப் பேசிய திரை நாயகன்!

Prithviraj meets real najeeb
Prithviraj meets real najeeb

மலையாள சினிமா எப்போதும் நல்ல யதார்த்தமான கலை நயமிக்கப் படங்களைத் தந்துவருகிறது. இப் படங்களுக்கு இந்திய அளவிலும், உலக அளவிலும் சிறந்த மதிப்பு உள்ளது. மலையாள சினிமா உலகளவில் பல்வேறு பாராட்டுகளைப் பெற்று வந்ததற்கு யதார்த்தமான காட்சிகளின் வழியே கதை சொல்வதுதான் காரணம். சினிமா என்பது காட்சி வழி கதை சொல்லும் ஊடகம் என்பதை புரிந்து வைத்திருப்பதுதான் காரணம்.  மலையாள சினிமாவில் எழுத்தாளர்கள் மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுவதும் முக்கியக் காரணம்.  

தகழி சிவசங்கரன் பிள்ளை, வைக்கம் முஹம்மது பஷீர் என மலையாள சினிமாவின் எழுத்தாளர்களின் ஆதிக்கம் மிக நீண்டது. இன்று முன்னணி நடிகராக இருக்கும் மம்முட்டி அவர்கள் தனது ஆரம்பக் காலத்தில் எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் எழுதிய கதைகளில் நடித்தவர்தான். இப்படி நல்ல கலையும் கதையும் கொண்ட மலையாள சினிமா கடந்த இருபது ஆண்டுகளாக ஹீரோக்கள் ஆதிக்கம் நிறைந்த வணிக சினிமாக்களைத் தந்து வருகிறது.

இந்த மாற்றத்தின் காரணமாக மலையாள சினிமா தனது ஆத்மாவை இழந்துவிட்டது என்று மலையாள ரசிகர்கள் பலர் வருந்தினர். தமிழ்நாட்டில் பல மலையாள படங்கள் வெற்றி பெற்றாலும் இவை பெரும்பாலும் ஹீரோ ஆதிக்கம் கொண்ட வணிக நோக்கப் படங்களே.

தற்சமயம் மீண்டும் மலையாள சினிமாவில் இருந்து நல்ல கதையம்சம்கொண்ட கலைப் படைப்புகள் வந்து வெற்றி பெறுகின்றன. உண்மைச் சம்பவம் அடிப்படையில் நாவலை மையமாக வைத்து கடந்த வாரம் பிரிதிவி ராஜ் நடிப்பில் ப்ளஸி இயக்கத்தில் வெளியான ‘ஆடு ஜீவிதம்’ காட்சி வழியே கதை சொல்லும் விதத்திற்காக ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது.  

2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2024ஆம் ஆண்டு ‘ஆடு ஜீவிதம்’ படம் முடிவடைந்து வெளியாகி உள்ளது. அதிக பொருட்செலவுடன் எடுக்கப்பட்ட இப்படம் கொரோனா, பாலைவனப்புயல் உட்பட பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வெளிவந்துள்ளது.

படம் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பைப் பெற்று வரும் சூழ்நிலையில் இப்படத்தின் ஹீரோ ப்ரிதிவி ராஜ், இக்கதையின் ‘ரியல்’ நாயகன் நஜீப்பை சந்தித்து உரையாடியுள்ளார். இந்த உரையாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் ‘ரியல் நஜீப் - ரீல் நஜீப்’ என்ற பெயரில் வைரலாகி வருகிறது.  பிரிதிவி ராஜ் நஜீப்பிடம், "நீங்கள் அனுபவித்த சித்ரவதைகளில் நாங்கள் ஒரு சதவீதம்கூட காட்டவில்லை.  நான் நாவலைப் படித்துவிட்டு, டைரக்டர் சொன்னதை மனதிற்குள் காட்சிப்படுத்தி அப்படியே நடித்தேன். ஆனால், என் நடிப்பின் மூலம் உங்கள் வலிகளை முழுமையாகச் சொல்லமுடியவில்லை" என்று இந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த உரையாடல்களில் நஜீப்புடன் சேர்த்து அவரது குடும்பத்தினரின் கருத்துகளையும் பதிவு செய்துள்ளார் பிரிதிவிராஜ். தான் சந்தித்த எந்த வேதனைகளையும் தங்கள் குடும்பத்தினருடன் நஜீப் பகிர்ந்துகொள்ளவில்லை. இந்த நாவல் படித்த பின்புதான் குடும்பத்தினருக்கு நஜீப் சந்தித்த சித்ரவதைகள் பற்றி தெரிய வந்திருக்கிறது என்ற தகவலும் இந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது. 1991ஆம் ஆண்டு, தான் வளைகுடா நாட்டிற்குச் சென்றபோது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாகப் பகிர்ந்துகொள்கிறார் நஜீப். "மீண்டும் உங்களை ஏமாற்றிய அந்த ஏஜென்டைச் சந்தித்தீர்களா?" என்று பிரிதிவிராஜ் கேட்கும் கேள்விக்குச் சுவாரசியமான பதிலும் தருகிறார் நஜீப்.  

ஒரு ஹீரோ என்ற அலட்டல் சிறிதும் இல்லாமல் பேசுகிறார் பிரிதிவிராஜ்.  ஒரு படம் வெற்றி பெற்றால் சம்பளத்தை ஏற்றிவிட்டு அடுத்தப் படத்தை நோக்கி செல்லும் ஹீரோக்கள் உள்ள சினிமாவில், தன் படம் வெற்றி பெற்றதற்குக் காரணமாக இருந்த ஒரு எளிய மனிதரைச் சந்தித்து மனம் விட்டு பேசும் ஹீரோ பிரிதிவிராஜ் ஒரு வித்தியாசமான மனிதர்.  அரிதாரம் பூசாத இந்த எளிய அணுகுமுறைதான் மலையாள சினிமாவை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com