நடிகர் ஆமிர்கான் கடந்த ஞாயிறு அன்று நேபாளத் தலைநகர் காத்மாண்டு சென்றடைந்ததாக அந்நாட்டு இமிக்ரேஷன் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 58 வயது ஆமிர்கான் தொடர்ந்து 10 நாட்கள் அங்கு நடைபெறவிருக்கும் விபாசானா எனும் தியானப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காகவே அங்கு சென்றிருப்பதாக ஆமிரின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருக்கின்றன.
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புத்த நீல்கண்டா எனும் இடத்தில் நடைபெறவிருக்கும் விபாசனா தியானப் பயிற்சி வகுப்பின் நிகழ்வுகளில் கலந்து கொண்டு தன்னைப் புத்துணர்வாக்கிக் கொள்ள ஆமிர்கான் திட்டமிட்டிருக்கலாம். ஏனெனில், இது தனிப்பட்ட பிரத்யேகப் பயணம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பிற்காகவோ அல்லது லொகேஷன் காண்பதற்காகவோ தற்போது ஆமிர்கான் அங்கு இல்லை.
இது முற்றிலும் தியானத்தில் ஆழ்ந்து போவதற்கான நேரம் என ஆமிர்கான் நினைத்திருக்கலாம். அதனால் தான் “லால் சிங் சத்தா” நடிகர் தனிமையில் இனிமை காண்பது போல இந்தப் பயணத்தை தியானத்திற்காகவே ஸ்பெஷலாக ஒதுக்கி இருக்கிறார் என்கின்றன பாலிவுட் வட்டாரத் தகவல்கள்.
தற்போது காத்மாண்டுவில் உள்ள ஆமிர்கானின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகின்றன, அதில் அவர் உள்ளூர் மக்களுடன் போஸ் கொடுப்பது மற்றும் குழந்தைகளுடன் பழகுவது போன்ற புகைப்படங்களை வைத்து அதிகாரிகளும் நடிகரின் நேபாள பயணத்தைப் பற்றி மேலும் உறுதி செய்தனர்.