நடிகர் தாமு அப்துல் கலாமிடம் 'சாப்பிடும்போது ஏன் பேசக்கூடாது?' என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் தாமுவை வாயடைக்க வைத்தது.
பொதுவாக உணவருந்தும்போது பேசக்கூடாது, டிவி மொபைல் ஆகியவைப் பார்க்கக்கூடாது என்று சொல்வார்கள். சாப்பிடும்போது உணவில் கவனம் செலுத்தி சாப்பிட்டால்தான் உடம்பில் ஒட்டும் என்று பெரியோர்களும் கூறுவார்கள். அந்தவகையில் இதுகுறித்து அப்துல் கலாம் கூறியது குறித்துப் பார்ப்போம்.
எத்தனை உயரத்திற்கு போனாலும் எளிமைக்கு பெயர்போனவர் அப்துல் கலாம். அனைவரிடமும் சமமாகவும் அன்பாகவும் பழகுபவர். இவர் எத்தனையோ நல்ல விஷயங்களை மாணவர்களுக்கும் மக்களுக்கும் கற்றுத்தந்திருக்கிறார். குறிப்பாக வாழ்க்கைத் தத்துவங்களையும், வாழ்வின் உண்மைகளையும் எவ்வளவோ எடுத்துரைத்திருக்கிறார். பொதுவாக பெரிய இடத்தில் இருப்பவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், சிலர் அவர்களை வெறுக்கவே செய்வார்கள். ஆனால், ஒட்டுமொத்த இந்தியர்களின் பேரன்பினைப் பெற்றவர் அப்துல் கலாம். இவரைப் பிடிக்காத ஒரு நபர் கூட இல்லை. இருக்கப்போவதும் இல்லை.
அந்தவகையில், அப்துல் கலாம் அவர்களை நடிகர் தாமு நேரில் சந்தித்திருக்கிறார். அப்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை குறித்து தாமு பகிர்ந்திருக்கிறார். அதாவது, “எப்போதும் அப்துல் கலாம் ஐயா சாப்பிடும்போது பேசக்கூடாது என்று சொல்வார். நான் ரொம்ப நாள் அவர்கிட்ட அதப்பத்தி கேக்கனும்னு நெனச்சுட்டே இருந்தேன். ஒருநாள், இதான் சமயம் என்று அவரிடம் கேட்டுவிட்டேன். அதாவது, ஏன் சார், சாப்பிடும்போது பேசக்கூடாது என்று சொல்றீங்கன்னு.
அதற்கு அவர் Eat-னா என்ன தெரியுமா?ன்னு கேட்டார். நான் எதும் சொல்லல. அவரே அதற்கு பதிலளித்தார். Eat-னா Experience All Taste ன்னு சொல்லிட்டு மீண்டும் சாப்பிட ஆரம்பித்தார். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.” என்று பேசினார்.
பொதுவாக சாப்பிடும்போது பேசக்கூடாது என்று சொல்பவர்களிடம் விளக்கம் கேட்டால், ஆரோக்கியம் குறித்தே பேசுவார்கள். ஆனால், அப்துல் கலாம், அனைத்து சுவைகளையும் அனுபவிக்கனும் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
நாமும் ருசித்து அனுபவித்து சாப்பிடுவோமே!