பிரபல யூடியூப்பராக வலம் வந்த அபிஷேக் ராஜா இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்குதோ, இல்லையோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பிரபலம் கிடைத்து விடுகிறது. யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருபவர் தான் அபிஷேக் ராஜா. படங்களை விமர்சனம் செய்து வருகிறார். இவர், சில சினிமா பிரபலங்களை பெட்டியும் எடுத்திருக்கிறார். இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக அரட்டை அடிப்பது, கலகலப்பாக இருப்பது போன்றவற்றை வாடிக்கையாக கொண்டிருந்தனர். அந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்ற அபிஷேக் ராஜா ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இது அவருக்கு நெகட்டிவாக மாறியது. ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிய பிரபலத்தை பெற்று தந்தது.
தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கிய 'இமைக்கா நொடிகள்' படத்தில் கதாநாயகியின் பாய் பெஸ்டியாக நடித்திருந்தார். தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள இவரின் படத்திற்கு ஜாம் ஜாம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை, ஓ மை கடவுளே, பேச்சிலர் என இரு காதல் திரைப்படங்களை தயாரித்த ஃபிலிம் ஃபேக்டரி தான் தயாரிக்கிறது.
இந்த படம் குறித்து பேசிய அபிஷேக், வழக்கமான ரொமான்டிக் காமெடி எண்டர்டெயினர் படமாக இது நிச்சயம் இருக்காது. மாறாக, அதிகமான என்டர்டெயின்மெண்ட், ரொமான்சுடன் த்ரிலிங்கான தருணங்களும் இந்தப் படத்தில் இருக்கும் என தெரிவித்தார்.