வடிவேலு யதார்த்தத்தின் கலைஞன் தனது வசனங்களினாலும், உடல் மொழியாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் வடிவேலு.இன்று செப்டம்பர் 12 வடிவேலுவின் பிறந்தநாள்.
குமாரவடிவேல் என்ற இயற்பெயர் கொண்ட வடிவேலு நடராஜன் பிள்ளை பாப்பா தம்பதிகளுக்கு மகனாக 1960 ல் மதுரையில் பிறந்தார். குடும்ப வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் மதுரையில் ஒரு கண்ணாடி கடையில் வேலை பார்த்தார் சினிமா ஆசையினால் சென்னை வந்து ராஜ்கிரண் அலுவலகத்தில் வேலை செய்தார் என் தங்கை கல்யாணி படத்தில் நடிக்க சிறு வாய்ப்பு கிடைத்தது.
இந்த படம் வெளியாகி சில ஆண்டுகள் கழித்து 1991ல் என் ராசாவின் மனசிலே படத்தில் தன் திறமையை வெளிப்படுத்த வடிவேலுவுக்கு வாய்ப்பு வந்தது. இப்படத்தில் போடா, போடா புண்ணாக்கு பாடலில் நடுவில் வரும் சில வசனங்களால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் வடிவேலு. கவுண்டமணி, செந்தில் முன்னணியில் இருந்த காலத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கினார் வடிவேலு. வடிவேலு தனித்திறமை கொண்டவர் என்பதை சரியாக கணித்தவர் கமல்ஹாசன்தான்.
தேவர் மகன் படத்தில் இசக்கி என்ற கதாபாத்திரத்தை வழங்கி நடிக்கவைத்தார். "ஒரு பக்கத்தில் சிங்கம் (சிவாஜி கணேசன் )மறுபக்கத்தில் புலி (கமல் ) என்னை நடின்னு சொன்னா எப்படி என்று தேவர் மகன் படத்தை இன்றும் நினைவுகூறுவார் வடிவேலு.
பிரபு தேவாவும் வடிவேலுவும் ஒரே போன்ற உடல் அமைப்பு கொண்டதால் பிரபு தேவாவிற்க்கு காதலன் உட்பட பல படங்களில் சிறந்த காமெடி இணையராக இருந்தார் வடிவேலு 1996 முதல் 2011 வரை வடிவேலுவின் நகைச்சுவை காலம் என்று தமிழ் சினிமாவை சொல்லலாம். உடல் மொழி மற்றும் முக பாவங்கள் மட்டுமில்லாது சில வசனங்களாலும் வடிவேலு புகழ் பெற்றார்.
'கைப் புள்ள கிளம்பிடாரு..
நானும் ரவுடிதான்..
நான் எதுக்குட சரி வர மாட்டேன்..
ஆஹா இவன் அவன்ல...
எதையும் பிளான் பண்ணி பண்ணனும்..
இப்படி பல வடிவேலு சொன்ன வசனங்கள் சினிமாவையும் தாண்டி மக்கள் மத்தியில் அன்றாட வாழ்க்கையில் பேசப்படுகிறது. காமெடி சேனல்களில் வடிவேலுவின் நகைச்சுவை நம்பர் ஒன் ஆக இருக்கிறது. பாரதிராஜா இவரை கருப்பு நாகேஷ் என்பார். சில படங்கள் ஹீரோவாக நடித்திருந்தாலும் இம்சை அரசன் 23 ம் மூன்றாம் புலி கேசி மட்டுமே வெற்றி பெற்றது.
2011 ஆம் ஆண்டு நடந்து சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் வடிவேலு. இந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றது. அடுத்த வந்த பத்தாண்டுகள் அ. தி. மு. க ஆட்சியே நீடித்தது. இந்த ஆண்டுகளில் தயாரிப்பாளர்கள் பலர் வடிவேலுவுக்கு வாய்ப்பு தர தயங்கினார்கள். இந்த ஆண்டுகளில் மிகக் குறைவான படங்களிலேயே வடிவேலு நடித்தார்.
வடிவேலு நடிப்பில் பல ஆண்டுகள் கழித்து இந்த வருடம் வெளியான மாமன்னன் படத்தில் இசக்கியாக கம்பீரமாக எழுந்து நின்றுள்ளார் வடி வேலு. இனி வடிவேலுவின் பயணம் நகைச்சுவையா அல்லது குணாசித்திரமா என்பதை பொருந்திருந்து பார்க்க வேண்டும் வடிவேலுவுக்கு பின் வந்த பல நகைசுவை நடிகர்கள் யாராலும் வடிவேலுவின் இடத்தை நிரப்ப முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை.