இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் திடீரென உயிரிழந்திருக்கும் செய்தி ஒட்டுமொத்த சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
Manoj Bharathiraja
Manoj Bharathiraja
Published on

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார். அவருக்கு வயது 48. தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த பாரதிராஜா தற்போது குணச்சித்திர நடிகராக படங்களில் நடித்து வருபவர். இவரது மகன் மனோஜ் பாரதிராஜா.

மனோஜ்கு சமீபத்தில் தான் ஓப்பன் ஆர்ட் சர்ஜரி சிகிச்சை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இவரது மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மரணம் அடைந்த மனோஜ் உடல் சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பாரதிராஜா தனது மகனை கடந்த 1999-ம் ஆண்டு அவரது இயக்கத்தில் உருவான தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். கடல்பூக்கள், சமுத்திரம், அன்னக்கொடி, பேபி, ஈரநிலம், அல்லி அர்ஜூனா, ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் மனோஜ். தமிழ் திரையுலகில் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ள மனோஜ்க்கு தனது தந்தையை போல் வெற்றி பெறமுடியவில்லை.

இதையும் படியுங்கள்:
இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்!
Manoj Bharathiraja

இவர் கடைசியாக 2022-ம் ஆண்டு வெளியான விருமன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடனும், ‘ஸ்நேக் அன்ட் லார்ட்ஸ்’ என்ற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். மனோஜ் சினிமாவில் மணிரத்னம், ஷங்கர் போன்றோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ரஜினியின் எந்திரன் படத்திலும் உதவி இயக்குனராக இருந்தார்.

கடந்த 2023-ம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அதுமட்டுமின்றி நடிகர் மனோஜ் அவரது தந்தை வழியில் இயக்குநர் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார்.

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெற்றி பெற்ற சிவப்பு ரோஜாக்கள் படத்தை ரீமேக் செய்து இயக்க மனோஜ் திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் அவரது மரணம் திரையுலகில் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்:
பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ் பாரதிராஜா!
Manoj Bharathiraja

தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் நாடகக் கலைகளைப் படித்து விட்டு இந்தியா வந்த அவருக்கு தந்தையை போல சினிமா துறையில் இருந்த அதீத நாட்டம் காரணமாக அந்த துறையிலேயே தன்னை ஈடுபத்திக்கொண்டார்.

நடிகர் மனோஜ் சாதுரியன் என்ற படத்தில் நடித்த போது உடன் நடித்த நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஷிதா, மதிவதனி என 2 மகள்கள் உள்ளனர்.

மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கனிமொழி, அண்ணாமலை, பிரேமலதா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஜி.கே.வாசன், சசிகலா உள்ளிட்ட பல அரசியல் கட்சித்தலைவர்களும், இசையமைப்பாளர் இளையராஜா, ஆர்.வி.உதயகுமார், பாடலாசிரியர் சினேகன், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் சூரி, சரத்குமார், நாசர், டி.ராஜேந்தர் உள்ளிட்ட சினிமாத்துறை பிரபலங்களும், இயக்குநர் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கார்த்தி, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ராம், சேரன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சேத்துப்பட்டில் வைக்கப்பட்டுள்ள மனோஜின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படியுங்கள்:
உடல் உறுப்பு தானம் செய்த இயக்குநர் சுசீந்திரன், நடிகர் மனோஜ் பாரதிராஜா அமைச்சர் மா.சு. நெகிழ்ச்சி!!
Manoj Bharathiraja

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com