தனுஷ், ரவி மோகனை தொடர்ந்து இயக்குனர் அவதாரம் எடுக்கும் நடிகர் ஆர்யா!

Director Arya
Actor AryaImage credit: AI
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

தமிழ் திரையுலகில் 20 வருடங்களை கடந்தும் வெற்றிகரமாக இருக்கும் ஒரு சில நடிகர்களில் ஆர்யாவும் ஒருவர். விஷ்ணுவர்த்தனின் அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர். அதன் பின்னர் உள்ளம் கேட்குமே , பட்டியல், பாஸ் என்கிற பாஸ்கரன் , மதராசபட்டினம், சார்பட்டா போன்ற வெற்றி திரைப்படங்களின் மூலம் முத்திரை பதித்து,தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.

ஆர்யா எப்போதும் பொதுஜன ரசிகர்களை கவரும் வகையில் பெரும்பாலும் ஜனரஞ்சகமான திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பார். ஆனாலும் அவ்வப்போது அவன் இவன் , மகாமுனி , நான் கடவுள் போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களிலும் நடித்து பெயர் வாங்கியுள்ளார்.

மற்ற நடிகர்களுடன் ஈகோ இல்லாமல் பழகுவதில் ஆர்யாவிற்கு நல்ல பெயர் உண்டு. திரையில் நடிகராக கலக்கி வந்த ஆர்யா, தற்போது இயக்குனராக உள்ளார் என்பது தான் கோலிவுட் புதிய செய்தியாக இருக்கிறது. இது தமிழ் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பல திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராக இருக்கும் அவர், தற்போது தன்னை மேலும் மேம்படுத்திக் கொண்டு, சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு நகர இயக்குநராக உள்ளார். ஆர்யாவின் நெருங்கிய நண்பர்கள் ஆன ரவிமோகன் மற்றும் விஷால் ஆகியோர் ஏற்கனவே இயக்குனருக்கான வேலையை தொடங்கி விட்டனர்.

ரவி மோகன் தற்போது யோகி பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். விஷாலும் தமிழ் , தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் மகுடம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஆர்யாவின் மற்றொரு நெருங்கிய நண்பரான சந்தானம்,கிட்டத்தட்ட இயக்குனர் போன்றே தனது திரைப்படத்தின் கதைகளிலும் இயக்கத்திலும் மறைமுகமாக பங்களித்து வருகிறார். இவர்களிடமிருந்து ஆர்வம் பெற்று ஆரியாவும் இயக்குனராக பணிபுரிய ஆசை வந்திருக்கலாம்.

ஆர்யாவிற்கு ஏற்கனவே தயாரிப்பு சார்ந்த துறைகளில் நல்ல அனுபவம் உள்ளது. அவர் தயாரிக்கும் திரைப்படங்களில் கதைகளை தேர்ந்தெடுப்பதிலும் அனுபவம் மிக்கவராக இருக்கிறார். தற்போது தான் இயக்க உள்ள திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் தீவிரமாக அவர் உள்ளார். அதே நேரம் ஆர்யா நடிகராக தான் ஒத்துக் கொண்டுள்ள திரைப்படங்களை முடித்துவிட்டு, இயக்குனருக்கான பணிகளை ஆரம்பிக்க உள்ளார்.

ஆர்யாவின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த ஆனந்தன் காடு மற்றும் வேட்டுவம் ஆகிய திரைப்படங்கள் தற்போது இறுதி கட்டப் பணிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த படங்கள் நிறைவு பெற்ற பின்னர் ஆர்யா அதிகாரப்பூர்வமாக தான் இயக்கம் திரைப்படத்தை பற்றி அறிவிப்பார் என்று கோலிவுட் வட்டாரம் காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் மார்கெட்டில் இருக்கும் பொழுது மற்ற நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கலாம், என்ற சூழலை நடிகர் தனுஷ் உருவாக்கி இருந்தார். தனுஷ் மற்ற நடிகர்களை கதாநாயகனாக வைத்து திரைப்படங்களை அவ்வப்போது இயக்கி வருகிறார். அவரது பாணியை பின்பற்றி தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களும் இயக்குனர் அவதாரம் எடுத்து வருகின்றனர்.

ஆர்யா வழக்கம் போல் ரசிகர்களை கவர, தனது வழக்கமான பாணியில் நகைச்சுவை கலந்த திரைப்படமாக எடுப்பாரா? அல்லது தனக்கு பெயர் வாங்கி கொடுத்த வித்தியாசமான கதைக்களத்தில் திரைப்படம் இயக்குவாரா? என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com