

பரமக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் சீனிவாசன், ராஜலட்சுமி தம்பதியின் இளையமகன் தான் பார்த்தசாரதி எனும், கமல்ஹாசன்.
1954 நவம்பர் 7ம் தேதி பிறந்த கடைக்குட்டி கமலுக்கு இரண்டு அண்ணன்கள், ஒரு சகோதரி.
கமல்ஹாசன் பார்த்த முதல் சினிமா படப்பிடிப்பு களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம்பெற்றிருக்கும் “கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ” என்ற பாடலுக்கான காட்சிகள்தான்.
கமலின் துறுதுறுப்பான நடவடிக்கைகளை கவனித்த ஏவிஎம் சரவணன், கமலை தங்களின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்த நினைத்தார்.
ஆகஸ்ட் 12 1960ம் ஆண்டு வெளியான “களத்தூர் கண்ணம்மா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கமல்.
“களத்தூர் கண்ணம்மா” படம் நடிக்கும்போது கமலுக்கு நான்கு வயது மட்டுமே.
களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி உப்புமாவை ஊட்டி விடும் காட்சியில்தான் சிறுவனாக இருந்த கமல் முதன்முதலில் நடித்தார்.
களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” பாடல் ஒன்றரை நிமிடங்களே படமாக்கப்பட்டிருந்தது. பின் கமலின் நடிப்பு பிடித்துப்போகவே, அக்காட்சியை இன்னும் அதிகமாக்கி மூன்று நிமிடங்களுக்குள் படமாக்குமாறு கூறியுள்ளார் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார்.
முதல் படமான களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான ராஷ்டிரபதி பவன் விருது பெற்றார் கமல்.
குழந்தை நட்சத்திரமாக பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, வானம்பாடி, ஆனந்த ஜோதி உள்ளிட்ட படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசனுடன் நடித்த பெருமை கமலையே சாரும்.
கமலுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அரங்கேற்றம்’ திரைப்படம் தான்.
ஆனால், கமல் முதன்முதலில் கதாநாயகனாக நடித்த படம் என்றால், 1974ல் மலையாளத்தில் வெளியான “கன்னியாகுமரி” படத்தில் தான். இந்த படத்தை இயக்குநர் கே.எஸ்.மாதவன் இயக்கியிருந்தார்.
இதன் பிறகுதான், 1975ல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தமிழில் உருவான “அபூர்வ ராகங்கள்” படத்தில் தமிழில் அறிமுகமானார் கமல்ஹாசன். ரஜினிகாந்துக்கும் அதுதான் முதல் படம்.
சினிமா துறையில் தனது குருவாக கமல்ஹாசன் போற்றும் நபர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களைதான்.
16 வயதினிலேயே படத்தில் நடை, உடை, பாவணை, தோற்றம் என அனைத்திலும் வித்தியாசம் காட்டி ஒரு சப்பாணியாகவே வாழ்ந்து காட்டியிருப்பார் கமல்.
“நினைத்தாலே இனிக்கும், 16 வயதினிலே, அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, மூன்று முடிச்சு” என பல படங்களில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்தனர்.
1977ம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் சப்பானியாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
“நினைத்தாலே இனிக்கும்” படம்தான் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த கடைசி திரைப்படம். இருவரும் இணைந்து நடித்த அத்தனைப் படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தன.
27 வயதிலேயே நூறு படங்களை கடந்து சாதனை படத்த ஒரு நடிகர் என்றால் அது உலகநாயகன் என்றழைக்கப்படும் கமல்ஹாசன்தான்.
1981ல் வெளியான ராஜபார்வை திரைப்படம்தான் கமல்ஹாசன் நடித்த 100வது படமாக அமைந்தது.
80களில் பிற மொழி படங்களிலும் நடிக்கத் தொடங்கினார் கமல்,ஏக்துஜே கேலியே, சாகர், ராஜ் திலக் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து, ஹிந்தி சினிமாவிலும் கோலோச்ச தொடங்கினார்.
ஃபிலிம் ஃபேர் விருதை 18 முறைக்கும் மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்ஹாசன் தான் என்ற பெயரை பெற்றார்.
‘எனக்கு விருது தராதீர்கள், புதியவர்களுக்கு தாருங்கள்’ என்று ஃபிலிம் ஃபேருக்கு கமல்ஹாசனே கடிதம் எழுதும் அளவிற்கு அவரிடம் விருதுகள் குவிந்தன.
1982 ஆண்டு மட்டும், வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, சனம் தேரி கஸம், சகலகலா வல்லவன், ஹே தோ கமால் ஹோகயா என ஐந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்து சாதனைப் படைத்தவர் என்ற பெருமையை பெற்றார் கமல்.
ஒரே வருடத்தில் 5 ஹிட் படங்களை கொடுத்த கமலின் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவேயில்லை என சினிமா செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது ரசிகர் மன்றத்தை எல்லாம் நற்பணி இயக்கமாக மாற்றிய முதல் இந்திய நடிகர் கமலஹாசன் தான்.
நடிப்பில் மட்டுமல்லாது நடனத்திலும் முறையாக பயிற்சி பெற்று சிறந்து விளங்கினார்.
“நான் ஏன் பிறந்தேன்” படத்தில் எம்ஜிஆருக்கும், சவாலே சமாளி படத்தில் சிவாஜிக்கும், அன்புத்தங்கை படத்தில் ஜெயலலிதாவிற்கும் நடன இயக்குநராக பணியாற்றினார்.
சிவாலயா என்ற நடனக்குழுவையும் நடத்தி வந்தார்.
மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபையில் அவரின் நாட்டிய அரங்கேற்றமும் நடத்தப்பட்டது.
இதுவரை ஐந்து மொழிகளில் என்பதுக்கும் மேற்பட்ட பாடல்களை சொந்த குரலில் பாடியுள்ளார் கமல்ஹாசன்.
34. மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார் கமல்.
விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்கள் “சவுத் ஏஷியன் இண்டர்நேஷனல்” விருதுகளை பெற்றன.
கமலின் நடிப்புத் திறமைக்காக 1990ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்திய அளவில் நடிகர் ராஜேஷ்கண்ணா, அமிதாப்பச்சன் ஆகியோருக்கு அடுத்த படியாக ஒரு கோடி ரூபாய் 90களில் ஊதியமாக பெற்ற ஒரே நடிகர் கமல் மட்டுமே.
2014ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.
கமலின் அனைத்து சாதனைகளையும் பாராட்டி, 2005ம் ஆண்டு சத்யபாமா பல்கலைகழகம், டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவித்தது.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஃபிரஞ்ச் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர் கமல்.
விஸ்வரூபம் என்ற திரைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பினால் நாட்டை விட்டே வெளியேறும் சூழல் ஏற்படும் எனக் பேசினார் கமல். ஆனால், இதுபோல சர்ச்சைகளை சந்தித்த கமலின் படங்கள் பெரும்பாலானவை ஹிட் ஆகியிருக்கின்றன என்பதே நிதர்சனம்.
தமிழ் சினிமாவில், பல தொழில்நுட்ப புதுமைகளை செய்ததில் முன்னோடியாக இருந்து உலகையே வியக்க வைக்கிறார் கமல்.
1989ல் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் சராசரி மனிதர்களை விட உயரம் குறைந்த கதாப்பாத்திரத்தில் CG இல்லாமால் நடித்த முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றார்.
தமிழ் சினிமாவில் தேவர் மகன் திரைக்கதை எழுத முதன் முதலாக மென்பொருள் (software)பயன்படுத்தப்பட்டது.
நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசனுக்கு முதல் முறையாக தேசிய விருது பெற்று தந்த படம் தேவர் மகன்.
தமிழ் சினிமாவில் குருதி புனல் படத்தில்தான் முதன் முதலில் dolby stereo அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியன் திரைப்பட்டத்தில் prosthetic makeupஐ அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன்தான்.
தசாவதாரம் என்ற படத்தின் மூலம் 10 கதாப்பாத்திரங்களை ஒரே ஆளாக நடித்த நடிகர் கமல்ஹாசன் மட்டும்தான்.
ஆளவந்தான் திரைப்படத்தில் இடம்பெற்ற cartoon சண்டைக்காட்சி தனிகவனம் செலுத்தினார் கமல். அதற்கு முன்புவரை திரைப்படங்களிர் கார்ட்டூன் காட்சிகள் இடம்பெறவில்லை.
விருமாண்டி படத்தில் முதல் முறையாக லைவ் sound recording மூலம் காட்சிகள் பதிவுச் செய்தார் கமல்.
விஸ்வரூபத்தில் Auro 3d surround system என தனது படங்களில் பல்வேறு புதுமைகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி, பரிசோதித்து, அதில் வெற்றியும் கண்டு வருகிறார் கமல்.
இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களில் அதிகளவு இடம்பெற்றது கமல்ஹாசன் படங்கள்தான்.
நாயகன், குருதிப்புனல், ஹே ராம் போன்ற கமல் படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
கமல்ஹாசனை ’ஆஸ்கர் நாயகன்’ எனவும் அழைக்கப்படுகிறார்.
கமல் நடித்த பல படங்களை அவரை அந்த இயக்கியிருப்பதும் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று.
மறைந்த இங்கிலாந்து ராணியே படபிடிப்புக்கு வந்து வாழ்த்திய, மருதநாயகம் என்ற படம் எப்போது வெளிவரும் என்பதே இன்றுவரையிலும் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சினிமா துறையில் பல்துறை வித்தகரான கமல்ஹாசன் பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து எழுதி `தேடி தீர்ப்போம் வா` என்ற ஒரு கட்டுரை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் அரசியல் மட்டும் அல்ல, உலக அரசியலையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் கமல்.
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் பேரணி ஒன்றை நடத்தியதன் மூலம், 80களில் மறைமுகமாக அரசியல் பேச ஆரம்பித்தார்.
அப்போதுதான் ‘மய்யம்” இதழை தொடங்கி நடத்த ஆரம்பித்தார்.
பின்னர் 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியையும் தொடங்கி அரசியல் களத்தில் காலடி எடுத்துவைத்தார்.
நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடன இயக்குநர், என்று பன்முக கலைஞனாய் திகழும் ஒரே நடிகர் கமல்ஹாசன்தான்.
சிறந்த நடிகருக்கான 3 தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண், செவாலியே, கலைமாமணி, பிலிம்பேர் விருதுகள்,நந்தி விருது, தமிழ்நாடு அரசு விருது என பட்டங்களின் மாமன்னன் என்றால் அது கமல்ஹாசன்.
அரசியல் கட்சியை தொடங்கினாலும் தொடர்ந்து தனது திரைத்துறையில் நடிப்பு, தயாரிப்பு என பிஸியாக இருக்கிறார் உலகநாயகன்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ளது இந்தியன்-2 படம்.இப்படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.