சமீபத்தில் தன் தந்தையான தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இரண்டு கார்கள் வாங்கியது குறித்து"வறுமையில் வாடி வீடு இல்லாமல் வாழ்ந்த நிலையில் இருந்து இன்று ஒரே நாளில் இரண்டு கார்கள் வாங்கும் நிலைக்கு நாங்கள் வந்தது எளிய விஷயம் இல்லை. கடின உழைப்பாளி அப்பாவுக்கும், சிக்கனமாக செலவு செய்த அம்மாவுக்கும் கிடைத்த வெற்றி இது" என அவரது மகள் ஐஸ்வர்யா எமோஷ்னலாக பதிவிட்டு இருக்கிறார்.
உண்மையில் எம் எஸ் பாஸ்கர் கடுமையான உழைப்பாளி என்பதை திரையுலகம் அறியும். முத்துக்குமார் சுப்பையா பாஸ்கர் எம் எஸ் பாஸ்கராக அறிமுகமானது காமெடி நடிகராகத் தான். அதற்கு முன் பல நாடக குழுக்களில் நடித்ததன் மூலம் கலைத்துறை அவரை வரவேற்றது. வசனத்தில் மாடுலேஷன், காமெடியில் டைமிங் ஆகியவை நாடக மேடைகளில் வளர்ந்தது.
அதே நேரத்தில் பல நடிகர்களுக்கு குரல் கொடுத்து டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றினார்.1990களில் தொலைக்காட்சியில் செல்வி ,விடாது கருப்பு உள்ளிட்ட சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் கவனத்தை ஈர்த்தார்.
அடுத்து நுழைந்த தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி நடிகர் ஆக வாய்ப்புகள் கிடைத்தன.வடிவேலு, விவேக் புகழுடன் காலகட்டத்தில் அமைதியான, புத்திசாலி காமெடி ஸ்டைலால் தனக்கென தனி அடையாளத்தை பதித்தார் பாஸ்கர்.
பக்கத்து வீட்டு மனிதர் போன்ற தோற்றத்தில் இயல்பான நகைச்சுவையால் கவர்ந்தவர்
காலப்போக்கில் காமெடி ரோல்கள் மட்டுமின்றி தந்தை, மாமனார், ஆசிரியர், நடுத்தர வர்க்க மனிதர் போன்ற பல கதாபாத்திரங்களில் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.
இவர் நடித்த 8 தோட்டாக்கள், மொழி, ஜெய்பீம், பார்க்கிங், கடைசி விவசாயி, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் காமெடியைத் தாண்டி ஆழமான நடிப்பு மூலம் அனைவரையும் கவர்ந்தார்.
இயல்பான உரையாடல், மிகையற்ற நடிப்பு, காமெடி + உணர்வுபூர்வமான நடிப்பு என இரண்டிலும் சம திறமை, எந்த வயதிலும், எந்த கதாபாத்திரத்திலும் பொருந்தும் நடிகர் என ரசிகர்கள் “Natural Actor”, “People’s Artist” அன்புடன் அழைக்கும் பெருமை பெற்றார்.
இவர் நடித்த பல படங்கள் தேசிய விருதுகளை பெற்றுள்ளது. சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் கடுமையான தந்தை பாத்திரத்தில் நடித்து சிறந்த துணை நடிகர் (Film fare South) Award , 8 தோட்டாக்கள் படத்தின் சிறந்த துணை நடிகர் அவார்ட் என்ற பல விருதுகளின் வரிசையில் சமீபத்தில் பார்க்கிங் படத்தில் வெகு சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு கிடைத்த சிறந்த துணை நடிகருக்கான (Best Supporting Actor) 71-வது தேசிய திரைப்பட விருது (National Film Award) இவரது கலை பயணத்தில் மகுடமாக அமைந்துள்ளது.
“நகைச்சுவை நடிகர்” என்ற எல்லையை தாண்டி, மனிதர்களின் மனதை பிரதிபலிக்கும் எளிமையான நடிகராக நிலையான இடத்தில் இருக்கும் எம் எஸ் பாஸ்கருக்கு அவரது மகள் தந்த நெகிழ்வான பாராட்டு பொருத்தமே.