ஒரு நடிகரின் திறமை என்பது எத்தனை படத்தில் நடித்திருக்கிறார் என்பதை பார்த்து அல்ல. அந்த படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை பொறுத்தது என்று நடிகர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம் இன்று இரு மொழிகளில் பல படங்களில் கதாநாயகன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ரஹ்மான். இந்த நிலையில் பாலிவுட் திரை உலகிற்கு கண்பத் படம் மூலமாக அறிமுகமாகியுள்ளார்.
இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ரஹ்மான் தெரிவித்தது, 1983 ஆம் ஆண்டு பள்ளியில் தேர்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு பெற்றோருடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது மலையாள இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்கிறாயா என்று என்னிடம் கேட்டார்? உடனே ஒப்புக் கொண்டேன். அதைத்தொடர் கூடெவிடே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானேன். பிறகு பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் கதாநாயகன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கொரோனா நோய் பரவல் காலத்திற்கு முன்பாக இயக்குனராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதற்காக கதைகளை தயார் செய்து ஈடன் கார்டன் என்ற தலைப்பில் படம் இயக்க முயற்சியை மேற்கொண்டேன். ஆனால் அந்த நேரத்தில் அதிக அளவிலான பட வாய்ப்புகள் என்னை தேடி வந்தது. இதை அடுத்து எனது மனைவி லட்சுமி வீடு தேடி வரும் பொழுது ஏன் அதை தவிர்க்க வேண்டும் என்று கூறி மனதை மாற்றி மீண்டும் நடிக்க அனுப்பி வைத்தார்.
ஏ ஆர் ரகுமானுக்கும் எனக்குமான உறவு சகோதர உறவு போன்றது. இதனாலையே என்னை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்ய வரும் பல இயக்குனர்கள் ஏ ஆர் ரகுமானை இசையமைக்க ஒப்பந்தம் செய்து தரும்படி நிர்பந்தம் செய்வர். அதனால் பல வாய்ப்புகளை தவிர்த்து இருக்கிறேன். சங்கமம் படத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றினோம். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்று இன்று வரை மிக பேமஸான பாடலாக படத்தின் இறுதி பாடல் உள்ளது.
90களின் காலகட்டத்தில் பாலிவுட் திரை உலகில் அறிமுகமாக வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அந்த நேரத்தில் தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிஸியாக இருந்ததால் அவற்றைத் தவிர்த்தேன். தற்போது மீண்டும் அந்த வாய்ப்பு என்னை தேடி வந்திருக்கிறது. கண்பத் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரை உலகிற்கு அறிமுகம் ஆகிறேன். படத்தின் இயக்குனர் அமிதாபச்சனுக்கு மகனாக நடிக்க வேண்டும் என்று கூறிய அடுத்த வினாடியே படத்திற்கு ஒப்புக்கொண்டேன்.
நான் திரையுலகின் ஜாம்பவான்களான சிவாஜி கணேசன், நாகேஷ், நசீர் ஆகியோருடன் நடித்திருக்கிறேன். அதை தொடர்ந்து அமிதாபச்சனுடனும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி.
தற்போதைய திரை உலகம் பெருமளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. பல்வேறு விமர்சனங்கள், அவதூறுகள் நிரம்பிய காலத்தில் மிகவும் சாதுரியமாக ஒவ்வொரு விஷயத்தையும் கையாள வேண்டி உள்ளது. ஒரு நடிகரின் திறமை என்பது எத்தனை படத்தில் நடிக்கிறார் என்பதை பொறுத்து அல்ல, அந்த படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை பொறுத்து தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.