சன்னியாசிகள் மற்றும் யோகிகள் தன்னைவிட வயதில் சிறியவர்களாக இருந்தாலும், அவர்களின் காலில் விழுவது தனது பழக்கம் என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினிகாந்த் தான் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வெளியான நிலையில், இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆன்மீக தலங்களில் வழிபாடு நடத்திய அவர், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.
அப்போது உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடனான சந்திப்பின் போது, அவரது காலில் ரஜினிகாந்த் விழுந்து மரியாதை செலுத்தினார். தன்னைவிட இருபது வயது குறைவான ஒருவரின் காலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விழுந்து மரியாதை செலுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில்,கடந்த 2017-ஆம் ஆண்டில் ரசிகர்களை சந்தித்தபோது, 3 பேர் காலில் மட்டுமே விழ வேண்டும். முதலில் பெற்றோர்கள், வயதில் மூத்தவர்கள் என்றெல்லாம் கூறியிருந்தார். ஆனால், தற்போது தன்னைவிட வயது குறைவான யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினிகாந்த் விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், தனது 12 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னை திரும்பினார். அப்போது ரசிகர்கள் அவருக்கு மலர்கள் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ஜெயிலர் படம் வெற்றியடைந்ததற்காக ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், இயக்குநர், இசையமைப்பாளர் உள்ளிட்ட படக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சன்னியாசிகள் மற்றும் யோகிகள் தன்னைவிட வயதில் சிறியவர்களாக இருந்தாலும், அவர்களின் காலில் விழுவது தனது பழக்கம் என்று கூறினார். இந்த 2 பேட்டியையும் இணைத்து பொதுமக்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது படு வைரலாகி வருகிறது.