அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை தான் ஆன்மீக ரீதியாக மட்டும் தான் பார்க்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நேற்று முன்தினம் (ஜனவரி 22) பிரம்மாண்டமாக நடைபெற்றது. சினிமா நட்சத்திரங்கள் பலர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தலைமையேற்று ராமர் கோவிலை திறந்து வைத்தார், இதனைத் தொடர்ந்து நேற்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக ராமர் கோவில் திறக்கப்பட்டடுள்ளது.
இதனிடையே ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்ற சினிமா நட்சத்திரங்கள் பலரும், கோவில் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் பேட்டி கொடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான் மனைவி, மருமகன், சகோதரன் என குடும்பத்தோடு அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றிருந்தார். ஏற்கனவே அயோத்தியில் புறப்படும் போது பேட்டி கொடுத்த அவர், தொடர்ந்து சென்னை திரும்பிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை ஆன்மீக நிகழ்வாகவே பார்ப்பதாகவும், ராமர் கோயில் திறப்பு தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருப்பதாகவும் பேசினார்.
மேலும், முதல் நாளில் பங்கேற்ற 200 பேரில் நானும் ஒருவராக இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.