எடாகி என்டர்டைன்மெண்ட் தயாரித்து, சித்தார்த், நிமிஷா விஜயன், அஞ்சலி நாயர் நடித்து வெளி வந்துள்ள படம் சித்தா. SU. அருண்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் ஹீரோ ஈஸ்வரை (சித்தார்த் ) இவரது அண்ணன் மகள் சித்தா என்று அழைக்கிறார். சித்தாவின் அண்ணன் மகளை ஒரு ஒருவர் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குகிறார். எங்கு தேடியும் அண்ணன் மகள் கிடைக்கவில்லை. இறுதியாக மயக்க நிலையில் மீட்கப் படுகிறார். இந்த பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர் யார்? கண்டு பிடிக்க முடிந்ததா என்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் தருகிறது மீதிக்கதை.
படத்தில் சில லாஜிக் மீறல்கள், சில தவறுகள் இருந்தாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சித்தார்த் ஒரு சரியான படத்தில் நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.படத்தின் நாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக வந்துள்ளார் சித்தார்த்.தான் தவறாக பழியை சுமக்கும் போது தவிப்பதும், அண்ணன் மகள் பாதிக்கப்படும் போது ஒரு அன்பான சித்தப்பாவாகவும் நல்ல நடிப்பை தந்துள்ளார்.நிமிஷா விஜயனும், அஞ்சலி நாயரும் நம் வீட்டு பெண்களையும், அம்மாகளையும் நினைவில் கொண்டு வருகிறார்கள்.
படத்தில் சில காட்சிகள் யதார்த்தத்தை மீறியதாக இருந்தாலும், திரைக்கதை நகர்வு ஒரு திரில்லர் படத்தை பார்த்த உணர்வை தருகிறது.படத்தின் கதைக்களமான பழனி, உடுமலையை மாறுபட்ட கோணத்தில் பாலாஜி சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் A.பிரசாத்தின் படத்தொகுப்பு படத்தை ஒரு த்ரில்லர் படமாக மாற்ற உதவியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடக்கும் போதெல்லாம் நாம் என்ன எதிர்வினை செய்கிறோம் என்ற கேள்வியை முன் வைக்கிறது சித்தா திரைப்படம்.இந்த படம் பார்த்தால் ஒரு பெற்றோராக கூடுதல் பொறுப்பு இருப்பதை உணர முடியும்.