
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான இருந்த நடிகை சிம்ரன் தனது மேலாளர் மறைவு குறித்து பதிவிட்டுள்ள இரங்கள் செய்தி மிகவும் உருக்கமாக உள்ளது.
1976ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் சிம்ரன்.1997ஆம் ஆண்டு தமிழ் திரை உலகிற்கு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். அறிமுகமான அதே ஆண்டில் நான்கு படங்களில் நடித்து தமிழ்நாட்டில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக உருவெடுக்கிறார். மேலும் அவருடைய தொடர் வெற்றி படங்களின் காரணமாக தமிழ்நாட்டின் முன்னணி கதாநாயகியாக உருவெடுக்கிறார்.
மேலும் தொடர் பட வாய்ப்புகள் மூலம் தமிழ் திரை உலகில் தனக்கான தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவ்வாறு சிம்ரனுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்தவர் அவருடைய மேலாளர் எம். காமராஜன். இவரே பெரும்பான்மையான படங்களின் கதையை கேட்டு உறுதிப்படுத்துவார் என்றும் திரை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இப்படி சிம்ரனுடைய வளர்ச்சியில் அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் மேலாளர் காமராஜன்.
இந்த நிலையில் நடிகை சிம்ரனின் மேலாளர் காமராஜன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் நடிகை சிம்ரன் ஒரு பதிவிட்டுள்ளார் அதில், ” எனது அன்பு நண்பர் திரு. எம் காமராஜன் அவர்கள் இனி இல்லை. 25 வருடங்களாக எனது வலது கரமாக இருந்து எனது ஆதரவு தூணாக செயல்பட்டவர். நம்பகத்தன்மைக்கு உரித்தவராக இருக்கும் நபர். உறுதியான மனிதர் நீங்கள் இல்லாமல் எனது சினிமா பயணம் சாத்தியமில்லை” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.