

தமிழக மக்களின் வாழ்க்கையில் திரைப்படங்கள் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. குறிப்பாக, தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவது வழக்கம். அந்த வகையில், 2026 பொங்கலுக்குத் திரையுலகமே வியக்கும் வண்ணம் நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' ஆகிய இரண்டு முக்கியத் திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவராகத் தீவிர அரசியலில் இறங்கியுள்ள விஜய் நடிக்கும் கடைசித் திரைப்படம் என்பதால் 'ஜனநாயகன்' படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு நிலவுகிறது. மறுபுறம், இந்தி மொழிப் போரை மையமாக வைத்து சமூகக் கருத்துகளுடன் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்த இரு படங்களும் ஒரே நேரத்தில் மோதுவது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்திரைப்படங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களும் வதந்திகளும் அவ்வப்போது கிளம்பி வருகின்றன. 'பராசக்தி' படத்தின் கதை திருடப்பட்டதாக ஒரு தரப்பினரும், 'ஜனநாயகன்' திரைப்படம் தெலுங்கு படமான 'பகவந்த் கேசரி'யின் ரீமேக் என மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். இவற்றுக்கிடையே, 30 ஆண்டுகளாகத் திரையில் கோலோச்சும் விஜய்க்கு, வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் போட்டியா என்ற கருத்து மோதல்களும் இரு தரப்பு ரசிகர்களிடையே அனல் பறக்கின்றன.
இந்நிலையில், சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 'பராசக்தி' இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் ஆற்றிய உரை ரசிகர்களிடையேயான கசப்புணர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா, நடிகர்கள் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில், சிவகார்த்திகேயன் விஜய் குறித்துப் பேசிய வார்த்தைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தனது உரையில், பொங்கல் ரிலீஸ் குளறுபடிகள் குறித்துப் பேசிய அவர், "நாங்கள் முதலில் தீபாவளிக்குப் பிளான் செய்தோம், ஆனால் விஜய் சார் படம் வந்ததால் பொங்கலுக்கு மாற்றினோம். மீண்டும் பொங்கலுக்கே விஜய் சார் படம் வந்ததும் ஜர்க் ஆகிவிட்டேன். தயாரிப்பாளரிடம் தேதி மாற்றலாம் என்று சொன்னேன். ஆனால், முதலீட்டாளர்கள் மற்றும் தேர்தல் காரணமாகத் தேதியை மாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் இது குறித்துத் தூதுவிட்டபோது, 'எஸ்.கே-வுக்கு என் வாழ்த்துகளைச் சொல்லுங்கள், படம் வரட்டும்' என விஜய் சார் பெருந்தன்மையுடன் சொன்னார்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
"மேன்மக்கள் மேன்மக்களே! 33 வருடங்கள் நம்மை மகிழ்வித்தவருக்கு நாம் மரியாதை செய்ய வேண்டும். எனவே, ஜனவரி 9-ம் தேதி எல்லாரும் 'ஜனநாயகன்' பார்த்துப் கொண்டாடுங்கள், ஜனவரி 10-ம் தேதி 'பராசக்தி' பாருங்கள். யார் என்ன சொன்னாலும் இது அண்ணன் - தம்பி பொங்கல்தான்" என சிவகார்த்திகேயன் பேசியது, இரு தரப்பு ரசிகர்களிடையே ஒற்றுமையை விதைத்துள்ளது.