மாவீரன் விமர்சனம்: தேவை கம்பீரம்!

மாவீரன் விமர்சனம்: தேவை கம்பீரம்!
Published on

சென்னை போன்ற நகரங்களில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களை ஊருக்கு வெளியே அடுக்கு மாடி குடியிருப்பு கட்டித்தந்து குடியேற்றம் செய்து வருகிறது குடிசை மாற்று வாரியம். இதன் கட்டுமானத்  தரங்கள் பற்றி பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதை போன்று அரசு கட்டித் தரும்  ஒரு தரமில்லாத கட்டிடத்தை கதைக் களமாக வைத்து உருவாகி உள்ள படம்தான் மாவீரன்.

சிவகார்த்திகேயன் நடித்த இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார்.யாரோ தன்னிடம்  பேசுவது போலவும், வழிநடத்துவது போலவும் சிலர் உணர்வதை  சொல்லியும், படித்தும்  நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதை போன்ற ஒரு உளவியல்  பிரச்சனையில் பாதிக்கப்படும் ஹீரோ தான் வசிக்கும் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழப்போவதை முன்கூட்டியே அறிந்துகொண்டு மக்களை காப்பாற்ற முயற்சிக்கிறார்.இந்த முயற்சியில் அமைச்சரோடு மோத அமைச்சர் ஹீரோவை கொல்ல நினைக்கிறார். இறுதியில் மக்கள் காப்பாற்றப்படுகிறார்களா என்பதாக படம் செல்கிறது.

படம் நகர நகர குறிப்பாக இரண்டாவது பாதி ஹீரோ வில்லன் மோதும் ஒரு சராசரி படமாக செல்கிறது. கோழையாக இருப்பவன் மாவீரனாக மாறும் அம்சம் பல படங்களில் இருப்பதை போலவே இந்த படத்திலும் அதே ஃபார்மூல கையாளப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் குரல் ஒரு அசிரீரியைப் போல பின்னால் வழி நடத்துவது ஒரு கட்டத்தில் அயர்ச்சியை  ஏற்படுத்துகிறது.மிஸ்கினின் நடிப்பு ஒரு யதார்த்தமான அரசியல் வில்லனை காட்டுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் கம் பேக் தந்துள்ள சரிதாவின் நடிப்பு ஒரு விளிம்பு நிலையில் உள்ள தாயின் கோபத்தையும், எதிர்பார்ப்பையும் கண் முன் கொண்டு வருகிறது.

சிவகார்த்திகேயன் சில காட்சிகள் நன்றாக நடித்தாலும் பல காட்சிகளில் ஒரே மாதிரியான எக்ஸ்பிரசனில் வெளிப்படுத்தி உள்ளார். அதிதி ஷங்கர் தன்னுடைய கதாபாத்திரத்தை சரியாக நடித்துளார்.யோகிபாபு நீண்ட இடைவெளிக்குப் பின் சிரிக்க வைத்துள்ளார்.பரத் சங்கரின் இசையில் பாடல்களின் வரிகளை கேட்க முடியவில்லை. விது அயன்னாவின் ஒளிப்பதிவில் கூவமும், கட்டிடங்களின் அழகியலை உணர்த்துகின்றன.சமகால கதையாக இருந்தும் யூகிக்க முடிந்த காட்சிகளால் மிக சாதாரண படமாக வந்துள்ளது மாவீரன். சிவகார்த்திகேயன் படம் என்றால் நகைச்சுவை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். இப்படம்  இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததும் குறையே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com