என்ன நடந்தது..? திடீரென ரசிகரிடம் மன்னிப்புக் கேட்ட நடிகர் சூரி..!
தமிழ் திரையுலகில் மட்டுமல்ல மற்ற மொழிப் படங்களிலும் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் கதாநாயகனாக நடிக்கும் போது மக்கள் ஏற்றுக் கொள்ள தயங்கும் நிலை உள்ளது. ஏனெனில் அவர்கள் நகைச்சுவையால் கவர்ந்து அதை மட்டுமே அவர்களிடம் எதிர் பார்க்கின்றனர். சில நகைச்சுவை நடிகர்கள் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து பெயர் வாங்குவார்கள்.
விதிவிலக்காக சிலர் மட்டுமே முழுநேர ஹீரோவாக நடித்து மக்களின் வரவேற்பை பெறுவார்கள். இந்த வரிசையில் சிறந்த நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட சூரி (Actor Soori) தற்போது மக்கள் மனம் கவர்ந்த ஹீரோவாக வளர்ந்து வருகிறார்.
சூரி முதன்முதலில் நடித்த படம் “சுந்தர புருஷன்” (1996). அதில் அவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் பல சிறிய கதாபாத்திரங்களில் நடித்த பிறகு அவர் மீதான கவனத்தை தந்த படம்
“வெண்ணிலா கபடி குழு” (2009) ஆகும். அதில் வந்த சூரியின் பரோட்டா சாப்பிடும் காமெடி அவரை பிரபலப்படுத்தியது. அதற்கு பிறகு அவர் “பரோட்டா சூரி” என்று கூட அழைக்கப்பட்டார்.
2023 ல் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலையில் சூரி முக்கிய கதாபாத்திரமாக (Constable Kumaresan) வெகு சிறப்பாக நடித்தார். இதன் பிறகு நடிகர் சூரியின் திரையுலக வாழ்க்கை புதிய திருப்பத்தை சந்தித்தது. நகைச்சுவை நடிகராகத் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர், அந்தப் படத்திற்குப் பிறகு, தமிழ் சினிமாவின் புதிய ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து வந்த 'கருடன்', 'மாமன்' மற்றும் 'விடுதலை 2' படங்களும் அவரது நடிப்புக்கு கூடுதல் மதிப்பை சேர்த்தன. இதனால் அவரது தற்போதைய படமான 'மண்டாடி' பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சூரியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய படமாக 'மண்டாடி' (Mandadi)உருவாக உள்ளது . 'மண்டாடி' படத்தை 2022 இல் “Selfie” என்ற படத்தில் உதவி இயக்குனராக இருந்த மதிமாறன்(Mathimaran Pugazhendhi) இயக்குகிறார், தெலுங்கு நடிகர் சுஹாஸ் படத்தில் வில்லனாக நடிக்கிறார். மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். மீன்பிடி சமூகத்தின் பாரம்பரிய படகுப் பந்தயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் ரூ. 80 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது,
இந்நிலையில் படத்தயாரிப்பின் போது, ஒரு ரசிகர் நேரடியாக சமூக ஊடகங்களில் சூரியிடம் படக்குழுவின் பவுன்சர்கள் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக புகார் அளித்தார்.
“அன்புள்ள சூரி அண்ணா, உங்கள் படப்பிடிப்பு எங்கள் ஊரில் நடைபெறுவது ஒரு மரியாதை. ஆனால் உங்கள் பவுன்சர்கள் இரவு படப்பிடிப்பைப் பார்க்க வரும் மக்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். தயாரிப்பு குழுவிடம் பேசுங்கள்," என்று அந்த ரசிகர் X தளத்தில் பதிவிட்டு சூரியின் கவனத்தை ஈர்த்தார்.
இது ஒரு சாதாரண ரசிகரின் புகாராக அலட்சியம் செய்யாமல் தனக்கு ஆதரவு தரும் மக்களில் ஒருவரான தனது ரசிகரின் உணர்வாக எண்ணி சூரி மிகுந்த நிதானத்துடன் அதை அணுகினார்.
"சகோதரரே, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. படப்பிடிப்பின் போது ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதை தயாரிப்பு குழுவினருக்கும் பவுன்சர் சகோதரர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். இனிமேல் நாங்கள் மிகவும் கவனமாக இருப்போம். உங்கள் அன்புதான் எங்கள் பலம்" என்று அவர் பதிவிட்டு குற்றச்சாட்டை மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொண்டு தனது ரசிகரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் அவரது 'மண்டாடி' படம் வெளியீட்டிற்கு தயாராகும் போது நிகழ்ந்த இந்த புகாரும் சூரி கையாண்ட நாகரிகமும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
ஒரு நடிகராக அவரது அந்தஸ்து தற்போது உயரத்தில் இருந்தபோதிலும், ஒரு சாதாரண ரசிகரிடம் இவ்வளவு பணிவுடன் மன்னிப்பு கேட்கும் அவரது திறமைதான் அவரை இன்று இருக்கும் இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்று பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த விஷயம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு ஏராளமான இணையவாசிகளிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

