
நடிகர் சூர்யாவின் 43 வது படத்தின் இயக்குனர் ,நடிகர்கள், இசையமைப்பாளர் யாரென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டது.
கடந்த அக்டோபர் 24ம் தேதி நடிகர் சூர்யா “42 hrs to go” என்று ஹின்ட் அப்டேட் கொடுத்தார். இதையடுத்து இன்று சூர்யாவின் 43வது படத்திற்கான அப்டேட் வெளியானது. இப்படத்தை வெற்றி இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். ஏற்கனவே சுதா கொங்கரா சூர்யா இணைந்து ஒடிடியில் வெளியான சூர்ரைப்போற்று படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக 2020ம் ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர்கள் சூர்யா மற்றும் அபர்ணா முரளிதரன் தேசிய விருது பெற்றனர்.
இதையடுத்து இன்று வெளியான அப்டேட்டில் சூர்யா 43ல் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது அவரின் இசையமைப்பில் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா ஃபகத் ஆகிய முன்னனி நடிகர்கள் இணைந்து நடிக்கவிருப்பது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது. இப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D Entertainment தயாரிக்கிறது.
சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் கதை ஒரு உண்மை சம்பவம் என கொங்கரா ஒரு பேட்டியில் முன்னர் கூறியிருந்தார். இப்படம் ஒரு ஹை பட்ஜெட் மூவியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தேசிய விருது பெற்ற சூரரைப்போற்று படமும் ஒரு உண்மைக் கதையை தழுவி எடுத்ததால் அடுத்து அதேபோல் ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுக்க இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், சூர்யா, சுதா கொங்கரா மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் முதல் முறையாக பெயர் வெளியிடப்படாத ”சூர்யா 43” படம் திரையரங்கில் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கே பெரிய விருந்தாக இருக்கம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வாடிவாசல் படம் தள்ளி போவது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தாலும் கங்குவா திரைப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் சூர்யாவின் 43 வது படத்திற்கான அப்டேட் அடுத்த ஆண்டு சூர்யாவின் சரவெடி ஆண்டாக அமையும் என ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.