நடிகை மாளவிகா மோகனன் சில நடிகர்கள் பெண்கள் பற்றி பேசும்போது வெளியில் நடிக்கிறார்கள். ஆனால், கேமராவுக்கு பின்னால் உண்மையே வேறு என்று பேசியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனனின் மகளான மாளவிகா மோகனன், தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து வருபவர். 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த "பட்டாம் போல" படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்திருந்தாலும், 2019ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த "பேட்ட" திரைப்படம் தமிழில் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அதன்பின்னர், விஜய்யுடன் இணைந்து நடித்த "மாஸ்டர்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து தனுஷுடன் "மாறன்" மற்றும் சமீபத்தில் விக்ரமுடன் "தங்கலான்" போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு திரையுலகிலும் பிரபாஸுக்கு ஜோடியாக "தி ராஜா சாப்" படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். மேலும் கார்த்தியுடன் "சர்தார் 2" மற்றும் மோகன்லாலுடன் "ஹிருதயபூர்வம்" போன்ற பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
மாளவிகா மோகனன், தனது திறமையான நடிப்பாலும், கவர்ச்சியான தோற்றத்தாலும் குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். பல்வேறு மொழிப்படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, இந்திய திரையுலகில் ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
இப்படியான நிலையில், மாளவிகா மோகனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, “சில நடிகரகள் பெண்களை மதிப்பதுபோல் வெளியே காட்டிக்கொள்கிறார்கள். ஆனால், கேமராவிற்கு பின்னால் அவர்கள் அப்படியே மாறுவார்கள். அதை நான் என் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன். கடந்த 5 வருடங்களில் முகமூடி போட்டுத் திரியும் பல நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன். இன்றும் நிறைய நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.” என்று பேசியிருக்கிறார்.