28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் ‘டிஸ்கோ சாந்தி’..!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தின் மூலம் 80 மற்றும் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை மீண்டும் நடிக்க வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Disco Shanti
Disco Shanti
Published on

80 மற்றும் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக, கவர்ச்சி கன்னியாக வலம் வந்த டிஸ்கோ சாந்தி ‘புல்லட்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்டரி கொடுக்க உள்ளார்.

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், தனது சகோதரர் எல்வினுடன் ‘புல்லட்' படத்தில் நடித்து வருகிறார். அமானுஷ்ய கதைக்களத்தில் திரில்லராக தயாராகும் இப்படத்தில் டிஸ்கோ சாந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகி உள்ளது.

1985-ம் ஆண்டு வெளியான ‘உதய கீதம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான டிஸ்கோ சாந்தி, 80 மற்றும் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக, கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ள இவரின் நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளம்.

‘ஊமை விழிகள்’ திரைப்படத்தில் இவர் நடனமாடிய ‘இராத்திரி நேரத்து பூஜை’யில் என்ற பாடல் பிரபலம் ஆனதால், அதன் பின் நிறைய திரைப்படங்களுக்கு ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பினைப் பெற்று புகழ் பெற்றார். சாந்த குமாரி என்ற இயற்பெயர் கொண்ட டிஸ்கோ சாந்தி, திரைப்படங்களில் டிஸ்கோ பாடல்களுக்கு நடனமாடி பிரபலமானதால், ரசிகர்கள் அவரை ‘டிஸ்கோ’ என்று அழைக்கத் தொடங்கினர். இதுவே அவரது புனைப்பெயராக நிலைத்து விட்டது.

‘ஊமை விழிகள்’, ‘ராஜ மரியாதை’, ‘ராசாவே உன்னை நம்பி’, ‘மணமகளே வா’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘வெற்றிவிழா’, ‘பவித்ரா’ என பல தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு அதிகளவு ரசிகர்களை உருவாக்கியது இவரது நடனத்தின் மூலம் என்றே சொல்லலாம்.

900 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர், சில காரணங்களால் கடந்த 1997-ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்காமல் முழுவதுமாக சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

இந்நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு, டிஸ்கோ சாந்தி மீண்டும் நடிக்க வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராகவா லாரன்ஸ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில், வைஷாலி ராஜ், சுனில், அரவிந்த் ஆகாஷ், காளி வெங்கட், ரங்கராஜ் பாண்டே, ஆர்.சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, விஜே தணிகை, சென்ராயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
2002ல் ரசிகர்களை கவர்ந்த 'அழகி' 22 வருடங்கள் கழித்து ரீ ரிலீஸ்..!
Disco Shanti

இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பை வடிவேலு விமல்ராஜ் மேற்கொள்ள, சண்டை காட்சிகளை பேண்ட்டம் பிரதீப் வடிவமைத்துள்ளார்.

'புல்லட்'படத்தில் டீசரை விஷால், எஸ்.ஜே,சூர்யா, பிருத்விராஜ், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் வெளியிட்ட நிலையில் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com