பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் ஜமுனா கதாபாத்திரத்துக்கு தமன்னா பொருத்தமாக இருப்பார் என்றும் அவரிடம் இதுகுறித்துப் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
பழம்பெரும் நடிகை ஜமுனா சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஜமுனா. சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாகவும், தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் நடிகர் கமலுக்கு தாயாகவும் நடித்துள்ளார்.
‘மிஸ்ஸியம்மா’, ‘தெனாலிராமன்’, ‘தங்கமலை ரகசியம்’ போன்ற பல தமிழ் படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்த ஜமுனா, ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவருக்கு 1999-ல் தமிழக அரசின் எம்ஜிஆர் விருது வழங்கப்பட்டது. நடிகை ஜமுனா 1980ம் ஆண்டு தேர்தலில் ஆந்திராவின் ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானவர். பின் 1990-களில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், ஜமுனாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜமுனா உயிரோடு இருந்தபோதே திரைக்கதை முழுவதும் எழுதி முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
ஜமுனாவின் சினிமா பிரவேசம், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த அனுபவங்கள், என்.டி.ராமாராவுடன் ஏற்பட்ட மோதல், காதல், திருமணம், அரசியல் பணிகள் போன்ற அனைத்து விஷயங்களையும் படத்தில் கொண்டு வருகிறார்கள்.
இந்த படத்தில் ஜமுனா கதாபாத்திரத்துக்கு தமன்னா பொருத்தமாக இருப்பார் என்று படக்குழுவினர் அவரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இதற்குமுன் ஜெயலலிதா, சாவித்திரி, சில்க் சுமிதா போன்றோரின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.