ஒரு ஹீரோயினை பிடித்திருந்தால் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைப்பார்கள், பிடித்த ஹீரோயினின் படம் தியேட்டர்க்கு வந்தால் கொண்டாடுவார்கள். இதை எல்லாம் தாண்டி பிடித்த கதாநாயகிக்கு கோவில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் சென்றால் அது தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் நாயகியாக உள்ள நடிகை குஷ்புதான்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
இன்று செப்டம்பர் 29ம் தேதி நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்புவின் பிறந்தநாள். குஷ்புவின் இயற்பெயர் நக்கத் கான். 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி பிறந்த குஷ்பு 1980 களில் குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சினிமாவில் அறிமுகம் ஆனார். பிரபல நடிகை ஹேமாமாலினி குஷ்பு குடும்பத்திற்கு நண்பர் என்பதால் இவர் மூலமாக ஹிந்தி சினிமாவில் அறிமுகம் கிடைத்தது குஷ்புவிற்க்கு.
இதன்பிறகு 1986 ஆம் ஆண்டு தெலுங்கு, கன்னட சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். ரஜினி, பிரபு நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் 1988 ஆம் ஆண்டு பிரபுவிற்க்கு ஜோடியாக தமிழில் அறிமுகம் ஆனார் குஷ்பு. 1989ல் வெளியான வருஷம் 16 குஷ்புவிற்க்கு ஒரு திருப்பு முனை படமாக அமைந்தது 1991 ல் வெளியான சின்ன தம்பி திரைப்படம் பட்டி தொட்டி ஏங்கும் வெற்றி பெற்று குஷ்புவை பெரிய ஹீரோயின் வரிசையில் இடம் பெற செய்தது.
குஷ்பு அறிமுகம் ஆன சமயத்தில் இருந்த மற்ற ஹீரோயின்கள் போல இல்லாமல் கொஞ்சம் குண்டாக வட்ட முகத்த்துடன் இருந்தார். "இவ சைனா பொண்ணு மாதிரி இருக்கா சினிமாவுக்கு லாயக்கு இல்லை என பலர் குஷ்பு காது படவே பேசி உள்ளார்கள். இதை பொறுப்படுத்தாத குஷ்பு தனது குண்டான உருவத்தை வைத்தே வெற்றி பெற்றார். 1990களில் பல இளம் பெண்கள் குஷ்புவை போல குண்டாக இருக்க வேண்டும் என நினைத்தார்கள். குஷ்பு சேலை, குஷ்பு ஹேர் ஸ்டைல் குஷ்பு இட்லி என பல பொருள்கள் குஷ்பு பெயராலேயே அழைக்கப்பட்டன.
ரிக்சா மாமா, சின்ன தம்பி, புருஷ லட்சனம், கிழக்கு வாசல் போன்ற படங்கள் இவரின் நடிப்பிற்கு உதாரணமாக சொல்லாம். பாரதி ராஜா இயக்கத்தில் கேப்டன் மகள், பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ஜாதி மல்லி திரைப்படங்களில் நடிப்பில் நன்றாக ஸ்கோர் செய்திருப்பார். நாட்டுப்புற பாட்டு படத்தில் ஒரு கிராமிய நடன கலைஞராக நடித்திருப்பார் குஷ்பு. இந்த படத்தில் நடிக்க ஒரு கிராமிய நடன கலைஞரிடம் நடன பயிற்சி எடுத்துக்கொண்டார்.இப்படத்தில் குஷ்பு ஆடி இடம் பெறும் ஒத்த ரூபாய் தாரேன் பாடல் இன்று வரை கல்லூரி விழாக்களில் இடம் பெறும் நடனமாக உள்ளது.
அரசியலில் கால்பதித்த குஷ்பு
1999 ல் இயக்குனர் சுந்தர் C யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அவந்திகா, அனன்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர். தனது அதிரடியான சில செயல்கள் மூலம் கவனம் ஈர்ப்பவர் குஷ்பு. சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகைகள் பற்றி தவறான கருத்து ஒன்றை இயக்குனர் தங்கர் பச்சன் ஒரு வார இதழில் தெரிவிக்க, இதனால் கோபம் அடைந்த குஷ்பு பல நடிகைகளை ஒன்று திரட்டி, நடிகர் சங்க அலுவலகத்தில் அவரை நடிகை மனோரமா காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்தார். 2005 ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையில் தமிழ் நாட்டு பெண்கள் பற்றி தவறான ஒரு கருத்தை சொன்னார். இதனால் கோபம் கொண்ட சில அரசியல் கட்சிகள் குஷ்பு மீது வழக்குகள் தொடர்ந்தன.
தமிழ் நாட்டின் பல மாவட்டங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவம் தான் குஷ்புவை அரசியலில் ஈடுபட வைத்தது என்று சொல்லலாம். 2011 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். திமுக வின் அடுத்த வாரிசு யார் என்ற தனது கருத்து ஒன்றை குஷ்பு தெரிவிக்க, இந்த கருத்தால் கோபம் கொண்ட உடன் பிறப்புகள் குஷ்புவுக்கு பிரச்சனை தந்தார்கள். உடன் பிறப்புகளை தட்டி கேட்காத தலைமை மீது வருத்தம் கொண்ட குஷ்பு திமுகழகத்தில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
சில ஆண்டுளில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தற்சமயம் பாரதிய ஜனதா கட்சியில் அரசியல் பணி செய்து வருகிறார். கடந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு தனது கருத்தை ஆழமாகவும், கோபமாகவும் பதிவு செய்யும் குஷ்பு, பாரதிய ஜனதாவில் சேர்ந்த பின்பு இந்த கட்சி ஆளும் மாநிலங்களில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் குறிப்பாக மணிப்பூர் விஷயத்தில் மென்மையான போக்கையே கடைபிடித்தார் என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு தேர்தலில் தோல்வியை சந்தித்தார் குஷ்பு.சினிமாவில் நடிகையாக மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தவரால் அரசியல் வாதியாக இன்னமும் ஈர்க்க முடியவில்லை.
உரக்க பேசு என்பதற்கு உதாரணம் குஷ்பு
கடந்த 2007 ஆம் ஆண்டு ஞான ராஜசேகரரன் IAS அவர்கள் பெரியார் படத்தை படத்தை இயக்கினார். பெரியார் மனைவி மணியம்மையாக குஷ்புவை நடிக்க வைக்க முயற்சித்தார். குஷ்பு மணியம்மை போன்று தோற்றத்தில் இருந்தது முக்கிய காரணம். மணியம்மை ரோலில் குஷ்பு நடிக்க கூடாது என்று பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி படத்தில் நடித்து மணியம்மையாக வாழ்ந்து காட்டினார். "மணியம்மை அவர்கள் பெரியாருடன் இணைந்து பல எதிர்ப்புகளை சந்தித்தவர். நான் இந்த சிறிய எதிர்ப்பை கூட நான் சந்திக்கவில்லை என்றால் எப்படி? என்று கருத்து தெரிவித்தார்.
அதேபோல், சமீபத்தில் தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய எட்டு வயதில் சொந்த தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக பொதுவெளியில் தெரிவித்தார் குஷ்பு. அவரின் இந்த கருத்து சமுகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள், அதனை மறைக்கால் குற்றம் இழத்தவர்களின் முகத்திரையை கண்டிப்பாக வெளி உலகத்தில் கிழித்தெறியவேண்டும் எனும் தைரியத்தை கொடுத்தது.
1980 களின் இறுதி மற்றும் 90 களின் தொடக்க காலத்தில் பல நாட்கள் குஷ்புவை பற்றிய செய்திகள் செய்திதாள்களில் வந்து கொண்டே இருந்தன. பின்னர் வந்த தனியார் தொலைகாட்சிகளிலும் குஷ்பு இடம் பிடித்தார். ஜெயா டிவியில் 2001 முதல் பத்தாண்டுகள் வரை இவர் நடத்திய ஜாக்பாட் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்போது சமூக தளங்களிலும் குஷ்புவை பற்றி ஏதாவது பேசிக்கொண்டிருக்கிறார்கள். நம்மில் பலருக்கு பிடித்த குஷ்புவை இவரின் பிறந்தநாளில் வாழ்த்துவோம்.