Annapoorani Movie
Annapoorani Movie

விமர்சனம்: அன்னபூரணி!

அக்கார அடிசலும், பிரியாணியும்! (3.5 / 5)

"நம்ம நாட்ல விடுகளில் பெரும்பாலும் லேடீஸ்தான் சமையல் செய்றாங்க. ஆனால் பெரிய ஸ்டார் ஹோட்டல்களுல ஏன் ரொம்ப குறைவான அளவுல லேடீஸ் செஃப்பா (சமையல் கலைஞர் )இருக்காங்க" என்று அன்னபூரணி படத்தில் சத்யராஜ் கேட்கும் கேள்விக்கு பதிலாக அன்னபூரணி  படத்தின் திரைக்கதையை அமைதிருக்கிறார் டைரக்டர் நீலேஷ் கிருஷ்ணா.                   

ஸ்ரீ ரங்க கோவிலில் மடப்பள்ளியில் பிரசாதம் செய்யும் ரங்கராஜன் மகள்  அன்னபூரணிக்கு (நயன்தாரா ) கேட்டரிங் படித்து ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசை. சைவ உணவு பழக்கம் கொண்ட நம் குடும்பத்துக்கு இது சரிவராது என்று சொல்ல அப்பாவை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறுக்கிறார் அன்னபூரணி.அன்னபூரணியின் போராட்டங்களின் வழியே படம் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.       

படத்தின் முதல் சில  காட்சிகளிலேயே ஸ்ரீரங்க கோபுரங்கள், வீதிகள், அக்ரஹாரம், கதை மந்தார்கள், பாசுரங்கள் என பல விஷயங்களை அழகான விஸுவலில் சொல்லி நம்மை ஒரு வைஷ்ணவ பகுதிககே அழைத்து சென்று விடுகிறார் டைரக்டர். ஆண்களை போலவே பெண்கள் பல துறைகளில் சாதித்தாலும்,கலாச்சாரம், குடும்பம் இப்படி பல காரணங்களை காட்டி பெண்ணின் சாதனைக்கு முட்டுகட்டை போடுகிறோம் என்று சொல்கிறது இப்படம்.

ஒரு பெண் பணி செய்யும் இடத்தில் தன்னை நிரூபிக்க  ஆண்களை விட அதிகம் உழைக்க வேண்டி உள்ளது என்பதை வசனமாக இல்லாமல் காட்சியாக வைத்துள்ளார் டைரக்டர். நடிப்பில் மிக பிரமாதம் என்று சொல்ல வைப்பவர் அப்பாவாக நடிக்கும் அச்சுத் குமார்தான். ஒரு  வைஷ்ணவராகவும், மகள் மீது இருக்கும் பாசத்திற்க்கும், சமூக கேள்விகளுக்கும் நடுவில் தவிக்கும் மனிதராக சிறப்பாக நடித்திருக்கிறார். ஐம்பது ஆண்டுகள் தன் மீது சமூகம் திணித்து வைத்திருக்கும் அழுத்ததை கேள்வி கேட்கும் போது சச்சு ஒரு பழம் பெரும் நடிகை என்பதை நிரூபித்து விடுகிறார்.

அச்சுத், சச்சு ஆகியோரின் நடிப்பிற்கு பிறகு தான் நயன்தாரா நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். அப்பாவுக்கு அடங்கி நடப்பதும், வேலையில் கம்பீரமாக நடந்து கொள்வதும் என  வித்தியாசம் காட்டி நடிக்கிறார். சத்யராஜ் நடிப்பில் ஒரு காட் பாதர் லுக் தெரிகிறது. ஜெய் நயன்தாராவை மோட்டிவேட் செய்யும் வேலையை மட்டுமே செய்கிறார்.     

படம் பார்க்கும் போது  பல்வேறு ரெஸிபிகள் பெயரை நாம் தெரிந்து கொள்ள முடியும். தமனின் பின்னணி  இசையும், சத்யன் சூரியன் ஒளிப்பதிவும்  காட்சிகளுக்கு ரிச் லுக்கை தருகிறது. ஸ்ரீரங்கத்து அக்கார அடிசிலில் தொடங்கும் கதை பாய் வீட்டு பிரியாணியில் முடிகிறது. இந்த உணவு பயணத்தின் வழியே பெண் விடுதலை, சமூகம், ஜாதி, இப்படி பல டிஷ்கள் அன்னபூரணியில் பரிமாறப்பட்டுள்ளன. அன்னபூரணி -நம்மில் ஒருத்தி.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com