தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என பன்மொழி ரசிகர்களை தன்னுடைய க்யூட்டான நடிப்பின் மூலம் கவர்ந்த நடிகை நஸ்ரியா ஃபகத் இன்று தன்னுடைய 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆண்டுக்கு சில பாடங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், நஸ்ரியா என்றும் ரசிகர்கள் மனம் கவர்ந்த ஹீரோயினாக உள்ளார்.
நஸ்ரியா நாஜிம் 1994ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார். ஆகையால் நஸ்ரியா பிறந்த சில காலங்களிலேயே குடும்பத்துடன் துபாய் சென்றுவிட்டனர். துபாயில் ‘அவர் ஓன் இங்கிலிஷ்’ பள்ளியில் தான் நஸ்ரியா படித்தார். படிப்பில் மிகவும் சிறந்து விளங்கிய நஸ்ரியா ஒரு வினாடி வினா போட்டிக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். அங்கு அவரின் ஆற்றல் மிக்க பேச்சு தொலைக்காட்சி நிறுவனத்தியே கவர்ந்துவிட்டது. அதனால் அந்த தொலைக்காட்சி நிறுவனம் நஸ்ரியாவை ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்ற அழைப்பு விடுத்தது.
இதன்மூலம் நஸ்ரியா முதல் முறையாக ஒரு நடன நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். அதன்பின் ‘ஸ்டார் சிங்கர்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போதுதான் நஸ்ரியாவுக்கு பட வாய்ப்பு வரத் தொடங்கியது.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 2006ம் ஆண்டு ’பாலுங்கு’ எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் மம்முட்டியின் மகளாக நடித்து அசத்தினார். இந்த படத்தில் தான் நஸ்ரியாவுக்கு மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. சிறு வயதிலிருந்து இன்றுவரை இருவரும் நெருக்கமான நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். அந்த படத்திற்கு பின்னர் நான்கு வருடம் படிப்பில் கவனம் கொண்டிருந்தார் நஸ்ரியா.
மீண்டும் அவர் 2010ம் ஆண்டுத்தான் ‘பிரமணி’ மற்றும் ‘ஒருநாள் வரும்’ ஆகிய இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர் 2013ம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியான ’நேரம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த நஸ்ரியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவரின் க்யூட்டான எக்ஸ்பிரசன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது.
நஸ்ரியா இதுவரை மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உட்பட மூன்று மொழிகளில் மொத்தம் 16 படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ’ஒரு நாள் வரும்’, ’ஓம் ஷாந்தி ஓசானா’, ’பெங்களூர் டேஸ்’, ’நேரம்’ போன்ற படங்கள் மூலம் மலையாள ரசிகர்களின் ஆதரவையும் அன்பையும் பெற்றார்.
அதன்பின்னர், துல்கர் சல்மான், நிவின் பாலி, ஃபகத் பாசில் மற்றும் நஸ்ரியாஆகியோர் சேர்ந்து நடித்து 2014ம் ஆண்டு வெளியான ’பெங்களூர் டேஸ்’ படம் ஒரு பெரிய ஹிட் கொடுத்தது. இந்த படத்தின்போதுதான் நஸ்ரியா மற்றும் ஃபகத் பாசில் இருவருக்கும் இடையில் காதல் உருவாகி, ’பெங்களூர் டேஸ்’ படம் வெளியாவதற்கு முன்பே இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். நஸ்ரியா,ஃபகத் பாசில் திருமணம் மலையாள திரையுலகில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமணமாகும்.
திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்துவந்தர் நஸ்ரியா.குறிப்பாக, 2018ம் ஆண்டு மலையாளத்தில் ’கூடே’ என்ற படத்தில் பிரபல மலையாள நடிகர் ப்ரித்வி ராஜிற்கு தங்கச்சி ரோலில் கலக்கியிருந்தார் நஸ்ரியா. சிறிதுகாலம் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த நஸ்ரியா, எப்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைப்பார் என ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளமே காத்துக்கொண்டிருந்தார்கள்.
அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தார் இயக்குனர் அட்லீ . அவர் இயக்கத்தில் முதல் முறையாக 2013ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனது முதல் தடத்தை பதித்தார் நஸ்ரியா. இந்த படத்திலிருந்து தமிழ் சினிமா ரசிகர்கள் இவருக்கு வைத்த செல்ல பெயர்தான் ”Expression Queen”. ராஜா ராணி படத்தில் நஸ்ரியா பேசும் ”Brother” டயலாக் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ரொம்ப ஃபேமஸ்.
பின்னர் அதே ஆண்டு தனுஷ் ஜோடியாக நய்யாண்டி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார். அந்த படத்தில் சில காட்சிகள் சர்ச்சையான நிலையில், படக்குழுவினர் மீது தைரியமாக புகார் அளித்தார் நஸ்ரியா. இது தமிழ் சினிமாவில் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது.
பிறகு 2014ம் ஆண்டு, துல்கர் சல்மானுடன் ’வாயை மூடி பேசவும்’ மற்றும் நஸ்ரியா, ஜெய் இணைந்து நடித்த ’திருமணம் எனும் நிக்காஹ்’ என்ற படத்தில் நடித்து மீண்டும் தமிழில் ஒரு Feel Good Movie கொடுத்தார். அதுவே அவரின் கடைசி தமிழ்ப்படமாக அமைந்தது.
அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2020ம் ஆண்டு ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான ’ட்ரான்ஸ்’ படம் நஸ்ரியாவுக்கு மாபெரும் ஹிட்டாக அமைந்தது. இந்த படத்தில் நஸ்ரியாவின் ரோல் யாரும் எதிர்பாராத அளவுக்கு அட்டகாசமாக அமைந்தது. பிறகு 2022ம் ஆண்டு நானிக்கு ஜோடியாக நடித்து வெளியான ’அண்டே சுந்தரனிக்கி’ என்ற படம் நஸ்ரியாவின்
ஒரு மாஸ் கம்பேக்காக அமைந்தது. அப்படம் தமிழிலும் வெளியாகி தமிழ் ரசிகர்களையும் திருப்தி செய்தது. இப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கும் சூர்யா 43 படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அந்தவகையில் 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதிக்கவுள்ளார் நஸ்ரியா.
மேலும் நஸ்ரியா மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் இணைந்து 2018ம் ஆண்டு வெளியான வரதன், 2019ம் ஆண்டு வெளியான கும்பலாங்கி நைட்ஸ் மற்றும் 2020ம் ஆண்டு வெளியான CU Soon ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.
குறைவான படங்களில் நடித்திருந்தபோதும் நஸ்ரியா தன்னுடைய க்யூட்டான மற்றும் அழுத்தமான நடிப்பால் தென்னிந்திய சினிமாவில் முக்கியமான ஹீரோயினாக வலம்வருகிறார். கதைக்களம் எவ்வளவு எளிதாக இருந்தாலும் நஸ்ரியாவின் நடிப்பே படத்திற்கு மாபெரும் ஹிட் கொடுக்கிறது என்பதால்தான் அவர் ‘Expression Queen’ என்று தென்னிந்திய ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.