
நடிகர் ரகுவரனின் திரைப்பயணத்தைப் பற்றிய ஆவணப்படத்தின் போஸ்டரை அவரது முன்னாள் மனைவி ரோகிணி வெளியிட்டார்.
தமிழ் சினிமாவில் இவர் பெயரை விட அவர் நடித்த கதாப்பாத்திரங்களின் பெயர்கள் திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. 'திரையில் வில்லன், நிஜத்தில் குழந்தை, பழகி பார்த்தால் என்னப்பா இப்படிப்பட்டவரா' என்று பிரம்மிப்பை தருபவர் ரகுவரன். ரகுவரன் என்றதும் 'I know' என்ற வசனமும் நினைவுக்கு வரும். பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனியாகவும், முதல்வன் படத்தில் முதலமைச்சராக நடித்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அனைத்து நடிகர்களுக்கும் சரியான டஃப் கொடுப்பார் என்றே சொல்லலாம்.
இப்படி வில்லன் கதாபாத்திரம் மட்டுமல்ல, ஹீரோ தந்தை என அனைத்து கதாபாத்திரத்தையும் தனது அசுர நடிப்பால் மிரட்டி விடுவார். இவருக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இன்றும் இவரது வாய்ஸை மிமிக்ரி செய்யாதவர்களே இருக்க மாட்டார்கள்.
ஒரு படத்தில் வரும் அதே கதாப்பாத்திரத்தை மீண்டும் ஞாபகப் படுத்தும், அலுத்து போகும் காட்சிகளில் நடித்து ரசிகர்களை போர் அடிக்க வைக்காத வில்லன் ரகுவரன். அதற்கு சின்ன எடுத்துக்காட்டு தெலுங்கில் வெளியான சிவா திரைப்படம் டிரெண்ட்செட்டை உருவாக்கியது. முதல் முறையாக நாகர்ஜூனாவை ஆக்சன் ஹீரோவாக மாற்றிய படம். தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய பிரேக்கை தந்த படம் என்றே சொல்லலாம். அந்த படத்தில் பவானியாக மிரட்டியிருப்பார். ஒரு வில்லன் கத்தி கூச்சலிட்டு, பெரிய தாடி, மீசை வைத்து கொண்டு கேங்ஸ்டராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கிளின் சேவ் பார்க்க நல்ல பையன் மாதிரி இருந்து கொண்டு இருந்த இடத்தில் ரவுடிகளை கட்டி ஆளும் ரியல் கேங்ஸ்டராக மிரட்டியிருப்பார் ரகுவரன்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த நடிகர் ரகுவரன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் 2008-ல் காலமானார். ரகுவரன் மறைந்து 16 ஆண்டுகளாகும் நிலையில், அவரது திரைப்பயணம், வாழ்க்கை உள்ளிட்டவை குறித்து ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஹாசிப் அபினா ஹகீப் என்பவர் இந்த ஆவணப்படத்தை இயக்கி உள்ளார். இதன் போஸ்டரை ரகுவரனின் மனைவியும் நடிகையுமான ரோகிணி வெளியிட்டுள்ள நிலையில், படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.