
சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87.
தமிழ் சினிமாவின் 69, 70 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகை சரோஜா தேவி. இன்றும் அவரது நடிப்பு பேசப்பட்டுதான் வருகின்றது. அந்த காலத்திலேயே எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற உச்சகட்ட நடிகர்களுடன் நடித்தவர் இவர். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்த சரோஜா தேவி, மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் என்றாலும் 1959 ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான கல்யாண பரிசு படத்தில் நடித்ததன் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.
எம்ஜிஆர் உடன் அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் சரோஜாதேவி. எம்ஜிஆர் உடன் கிட்டத்தட்ட 26 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். அதைப்போல சிவாஜி கணேசன் உடன் 22 படங்களில் நடித்திருக்கிறார்.
பார்த்திபன்கனவு, அன்பேவா, ஆசைமுகம், ஆலையமணி , கல்யாணபரிசு, எங்கள் வீட்டுப்பிள்ளை என அடுத்தடுத்து சரோஜா தேவி நடித்த படங்கள் அனைத்தும் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தியில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் சரோஜா தேவி.
அதிகளவு சம்பளம் வாங்கிய நடிகைகளில் ஒருவர் சரோஜா தேவி. சரோஜா தேவிக்கு 1967ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியலாளர் ஸ்ரீ ஹர்ஷாவுடன் திருமணம் நடந்தது.
ஆனால் ஸ்ரீஹர்ஷா 1986ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
அதன் பிறகும் பல படங்களில் நடித்து அசத்தி வந்தார் சரோஜா தேவி. ஆதவன் படத்தில் அவரது கதாபாத்திரம் பலரையும் வெகுவாக கவர்ந்தது. எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கனகச்சிதமாக பொருந்த கூடியவர் சரோஜா தேவி. மேலும் தனது திறமை மிக்க நடிப்பால் கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பவர்.
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.