‘சமையலறையிலேயே பெண்களின் வாழ்க்கை முடிந்துவிடக்கூடாது’ நடிகை சுகாசினி கருத்து!

‘சமையலறையிலேயே பெண்களின் வாழ்க்கை முடிந்துவிடக்கூடாது’ நடிகை சுகாசினி கருத்து!

பல பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடும் இந்தக் காலத்தில் அந்தப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை அலசும் விதமாக தயாராகி வருகிறது ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் தோன்றுகிறார்.

ஆர்.கண்ணன் படத்தை இயக்குகிறார். துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை சுஹாசினி, “இப்போது இருக்கும் புது இயக்குநர்கள் அனைவரும் ஆர்.கண்ணனிடம் இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். பலரும் ஒரே காட்சியை 12 நாட்கள் படமாக்குகிறார்கள். ஆனால் இவர் ஒரு படத்தையே 12 நாட்களிலேயே எடுத்து விடுகிறார்.

நகைச்சுவை உணர்வு மிக்க அவர், இந்த சீரியசான படத்தையும் அருமையாக எடுத்துள்ளார். கண்ணனுக்கு இதுபோன்ற படம் எடுக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியதற்கு வாழ்த்துகள்.

கேரளாவில் விருது குழுவில் இடம் பெற்ற 9 பேர்களில் நான் ஒருத்திதான் பெண். அவர்களிடம் சண்டையிட்டு இதுதான் சிறந்த படம் என்று பார்க்க வைத்தேன்.

நான் மணியை திருமணம் செய்துகொள்ளும்போது ரூ.15 ஆயிரம் தான் இருந்தது. அவர் 5 படங்கள் தான் இயக்கியிருந்தார். நான் 90 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். இந்த நிலையில் நண்பர் வீட்டிற்கு விருந்திற்கு சென்றிருந்தோம். அங்கு புதிதாகத் திருமணமான மணப்பெண்ணான எனக்கு இறுதியாகத்தான் உணவு பரிமாறினார்கள். முதலில் ஆண்கள் சாப்பிட்டு முடித்த பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டும் என்கிற சம்பிரதாயம். அதுவும் சமையலறையில்தான் கொடுத்தார்கள். எனக்கு சினிமா பார்ப்பது போல அதிர்ச்சியாக இருந்தது. காலம் மாறவே மாறாதா என்று அன்று தோன்றியது.

எழுத்தாளர் அம்பை ஒரு புத்தகம் எழுதினார். அந்தக் கதையில் அவர்கள் வீட்டில் தயாரிக்கும் தோசையின் சுவை போன்று வேறு எங்கும் கிடைக்காது என்றார் . அதே போன்று சமையலறை மூலையில் ஏன் இவர்கள் இருக்க வேண்டும் என்று பாலசந்தரும் சிந்தித்தார்.

பெண்களின் சமையலறை நேரத்தை குறைப்பதற்காக ராமகிருஷ்ணன் ஓப்போஸ் குக்கிங் தொடங்கி இருக்கிறார். இவர்களைப் போன்ற மனிதர்களைப் பார்க்கும் போது தான் நம்பிக்கை வருகிறது.

எனக்கு கிடைத்த அனுபவம் என் வீட்டிற்கு வரும் பெண்ணிற்கு கிடைக்க கூடாது. என்னுடைய வீட்டிற்கு வரும் புது மணப்பெண்ணிற்கு நானோ அல்லது எனது கணவரோ தான் முதலில் பரிமாற வேண்டும் என்று எண்ணுகிறேன்.

இந்த படம் நிச்சயம் எல்லோரிடமும் மாற்றம் கொண்டு வரும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார் சுஹாசினி மணிரத்னம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com