
சினிமாவில் நல்ல கலராக இருந்தால் தான் கதாநாயகியாக ஜொலிக்க முடியும் என்ற நிலை உள்ளது. பொதுவாக சினிமா துறையில் கதாநாயகிகள் என்றாலே கேரளா அல்லது பாலிவுட்டில் இருந்து வருவதை தான் தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள். அவர்களுக்கு தமிழ் பேச தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை என்றே நினைக்கிறார்கள். அதுமட்டுமின்றி நன்றாக தமிழ் பேச தெரிந்த கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு தான். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் நன்றாக தமிழ் பேசுவார்.
சன் தொலைக்காட்சியில் 'அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்த இவர் , மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். 2010-ம் ஆண்டு வெளியான ‘நீதானா அவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 2012-ம் ஆண்டு வெளியான 'அட்டகத்தி' திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். 2017-ல் டாடி என்ற இந்தித் திரைப்படத்தில் அர்ஜூன் ராம்பாலுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து தனது திறமையால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ‘காக்கா முட்டை, தர்மதுரை, பண்ணையாரும் பத்மினியும், க.பெ.ரணசிங்கம், வட சென்னை, கனா' போன்றவை அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தன. காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் திரைப்பட விருது இவருக்குக் கிடைத்தது. தமிழைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் உடன் நடித்த ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14-ம்தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதுடன் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் சேலத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர் உங்களுடைய ஒரிஜினல் கலரே இதுதானா? அல்லது படத்தில் வரும் கலர்தான் ஒரிஜினலா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு கோபப்படாமல் கூலாக பதில் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ‘நான் வெள்ளையாக இல்லை. நம்ம ஊரு பெரும்பான்மை பெண்கள் மாநிறம்தான். மாநிறத்தில் இருக்கும் பெண்கள் அழகாகவும், களையாகவும் இருப்பார்கள்’ என்றார்.
நிறம் குறித்த கேள்விக்கு கோபப்படாமல் கூலாக பதில் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.