நடிகை ராஷ்மிகா, கத்ரீனா, கஜோலை தொடர்ந்து 4வதாக ஆலியா பட்டின் டீப் ஃபேக் வீடியோ தீயாய் பரவி வருகிறது.
நாடு டிஜிட்டல் மையமாக மாற மாற குற்றங்களும் பெருகி கொண்டே தான் போகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. இதனை எவ்வாறு தடுப்பது என தெரியாமல் சைபர் க்ரைம் போலீசாரும் திணறி வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்தி அண்மையில் ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியாக உடையணிந்தது போல சித்தரிக்கப்பட்டது. வெளிநாட்டு வாழ் இந்திய பிரபலத்தின் இன்ஸ்டாகிராம் வீடியோவை deep fake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ராஷ்மிகா கவர்ச்சியாக உடையணிந்ததாக சித்தரிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பிகாரைச் சேர்ந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து கத்ரீனா கைஃப்-இன் வீடியோவும் சித்தரிக்கப்பட்டு சர்ச்சையானது. அதன் தொடர்ச்சியாக, போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு, அது தொடர்பான அறிவுறுத்தல்களையும் வெளியிட்டது. மேலும், பிரதமர் மோடியும் இதற்கு கண்டனங்களை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து 4வது முறையாக பாலிவுட் நடிகை ஆலியா பட் முகத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் ஆபாச அசைவுகளை வெளிப்படுத்தும் பெண்ணின் உடலில் ஆலியா பட்டின் முகம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.