மும்பை மாநகரில், மேம்பாலங்கள் கட்டுவதாலும், சாலைகள் விரிவுபடுத்தும் வேலைகள் நடப்பதாலும், எல்லா இடத்திலும் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலோ நெரிசல்தான். அலுவலகம் மற்றும் வீடு செல்ல ஒரு சில கிலோமீட்டர்களே இருப்பினும் சுமார் 2 மணி நேரங்கள் ஆகிவிடுகின்றன. எக்கச்சக்க டிராபிக்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை புறநகர் பகுதி ஒன்றில் நடந்த படப்பிடிப்புக்குச் செல்ல பிரபல நடிகர் அமிதாப் பச்சன் தன் காரில் சென்று கொண்டிருக்கையில், போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டார். குறிப்பிட்ட நேரத்திற்கு படப்பிடிப்பு நடக்குமிடத்திற்குச் செல்ல இயலாத சூழ்நிலை – படக்குழுவினரோ இவருக்காக காத்துக்கொண்டிருந்தனர்.
அமிதாப்பச்சன் மடமடவென காரைவிட்டு இறங்கி சாலையில் சிக்னலுக்காகக் காத்திருந்த ஒரு பைக் ஓட்டியிடம் சென்று தன்னை படப்பிடிப்பு தளத்தில் இறக்கிவிட கேட்க, அந்த பைக் ஓட்டுனரும் அவரை பின்புறம் அமரவைத்து கூட்டிச்சென்று விட்டுள்ளார். அவருக்கு நன்றி கூறிய அமிதாப், தனது இன்ஸ்டாகிராமில் இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு, பைக் ஓட்டிக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அதில் “ரைடுக்கு நன்றி நண்பா!” நீங்கள் யாரென்று தெரியாது. எனினும் நான் கேட்டவுடன் ஒப்புக்கொண்டு, வேகமாகவும், தீர்க்க முடியாத டிராஃபிக் சிக்னல்களைத் தவிர்த்தும் என்னைப் படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டு சேர்த்தீர்கள். மஞ்சள் நிற டீஷர்ட்; தொப்பி; ஷார்ட்ஸ் அணிந்த உங்களுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.
அமிதாப்பச்சனின் கார் ஓட்டுனர் இந்தப் படத்தை க்ளிக் செய்துள்ளார். அமிதாப்பச்சனின் நன்றி பாராட்டும் இந்தக் கடமை உணர்வுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
லண்டன் லார்ட்ஸ்ஸில் ‘83’ சினிமா!
லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றது. ‘83’ என்கிற பெயரில் திரைப்படமாக வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றது.
‘83’ திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில், மிகப் பிரம்மாண்டமான திரையில் பிரத்யேகமாக திரையிடப்படவிருக்கிறது.
இது குறித்து இப்படத்தின் இயக்குனர் கபீர் கான் கூறியதாவது:-
“லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் நிர்வாகம் இந்த அற்புதமான யோசனையைக் கொடுத்தது வரவேற்பிற் குரியது. இப்படத்தின் இறுதிக்காட்சி லார்ட்ஸ் மைதானத்தில் படமாக்கப்பட்டது. திரைப்படங்கள், படமாக்கப்பட்ட இடங்களில் திரையிடுவது சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. இரண்டு நாள் பிக்னிக் போல இருக்கும் இந்நாட்களில் இந்திய உணவிற்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதில் நடித்தவர்களாகிய ரன்வீர் சிங்; தீபிகா படுகோனே; ஜீவா போன்றவர்களையும் கபில்தேவையும் அழைத்துவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்பதாகும்.
லார்ட்ஸ் மைதானத்தில் காட்டவிருக்கும் ‘83’ திரைப்படத்திற்கு இந்திய மதிப்பின்படி பெரியவர்களுக்கு ` 3,000; மாணவர்களுக்கு `` 2,000; சிறுவர்களுக்கு
` 500ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.